Friday 11 September 2015

வண்ணக் கனவுகள்
















கருப்பு வெள்ளை இரவுகளால்
எப்படி அவ்வண்ணப் படிவங்களை
வரையமுடிந்ததென
நீண்ட நாட்களாக
எனக்குள் நிலைத்திருந்ததொரு கேள்வி

இரவுகளில் பெரும்பாலானவை நீட்சியற்றும்
நிலைகுலைந்தும் முடிந்திருந்தமையால்
பெரும்பாலான அக்கனவுகளின் பக்கங்கள்
அடிக்கோடிடப்படாத வார்த்தைகளால்
அவசரமாக நிரப்பப்பட்டிருந்தன

குற்றுயிராய் கிடந்த அவ்விரவுகளின்
வலியோசையில் விளைந்த
விழியோர நீர்த்துளிகளினால்
முக்கியமற்றவையெனும் கருத்தில்
கரைக்கவும் பட்டிருந்தன

இயலாமையிலும் கையறு நிலையிலும்
கசிந்த கண்ணீர்த்திவலைகளை
சுமந்திருந்த சிற்சில பகல்களின்
தொடக்க விளிம்பில் இழைந்தடங்கிய
ஒரு சில இரவுகளில்
பிறந்த கனவுகள் மட்டும்
வண்ணமயமாக இருந்தன

இயலாமையின் வெளிப்பாடாய்
ஏக்கமும் தாக்கமும்
சுமந்திருக்கும் கனவுகளெனில்
தம்மில் அவை வர்ணம் பூசிக்கொண்டதெப்படி

இயலாமை சுமந்த துடிப்புடன்
ஆழ்ந்த வலியையும் பொதிந்த
என்னைப் போன்ற இதயங்களின் கூட்டில்
நம்பிக்கை பூக்கள் மலர்ந்து
வண்ணங்களை நிரப்பியிருக்கலாமோ...!

No comments:

Post a Comment