Monday, 28 September 2015

குயலவன் அன்றில்
அன்புச் சகோதரரான இவர் சற்றேறக்குறைய இரு வருடங்களாக எனது நட்பில் இருக்கிறார்.
சரவணா ஹரிதான் எனக்கு இவரை அறிமுகம் செய்தார்.
அன்றே இவரது அநாயாசமான எழுத்து நடையில் மயங்கித்தான் போனேன். கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே விரிய வைத்து எளிமையான மொழியில் கனமான நிகழ்வுகளை சொல்லிச் செல்வார்.
தனது தாத்தா, அக்கா, அம்மா என்று உணர்வில் என்றும் வாழும் உறவுகளுடனான இவரது வாழ்வை கவிதை வரிகளில் விவரிக்கும்போது நமக்கும் அதுபோன்ற அம்மா, அக்கா, தாத்தா வேண்டுமெனும் தவிப்பு மேலிடுவதை தவிர்க்கமுடிவதில்லை
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!
என்னும் கவிதையில் அம்மாவின் கையை நமக்கும் ஒரு நிமிடம் உணரச் செய்கிறார்.
“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின்
கை பிடித்து உள்ளங்கை
பார்த்ததில்லையே.!!”
என்னும் கவிதையில் இவர் தரும் ஏக்கவுணர்விற்கு ஈடு இல்லையே.
"நீச்சத்தண்ணியில குனிந்து
முகம் பார்க்கிறாள்.
பொட்டில்லா நெற்றி நோக்கி
நகருகிறது
மிதக்கும் புளியம்இலை.!!"
இக்கவிதையில் நான்கு வரிகளில் என்ன ஒரு அநாயாசமாக கைம்பெண்ணின் அவலத்தையும் அதற்கு இயற்கையும் இசைவதில்லையெனும் மாண்பையும் விவரிக்கின்றார்.
"அக்கா மழைப்பைத்தியம்.
மழைன்னாலே அவளுக்கு கருவாடு மொச்சக்கொட்டை குழம்பு
வறுத்த புளியங்கொட்டை
மழைன்னாலே அவளுக்கு
மழை நின்ற பின்னான புளியமரத்து மழை.
தாழ்வாரத்துச்சாரலில் கால்நீட்டி நனைக்கும் கொலுசு.
குளிருக்கு அப்பாவின் சாணிப்பச்சை சட்டை.
மழைன்னாலே பேய்க்கதை
மழைன்னாலே இருக்கும் ஒற்றைக்கம்பளியில் என்னை அணைத்துக்கொண்டு அம்மாவாகத் தூங்குவது.
மழைன்னாலே கடைசியா பார்த்த அம்மா முகம்.
சேகர் மச்சான் கல்யாணம்.
எனக்கு மழைன்னாலே அக்கா கடைசியா சிரிச்சது.
மழைன்னாலே அக்கா.!!"
இக்கவிதையினை வாசிக்கும்போது எனக்கு சகோதர சகோதரிகள் இல்லையெனும் ஆழ்மன ஏக்கம் வெடித்து பீறிட்டுக் கிளம்புவதை தவிர்க்க இயலவில்லை.
“நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்
அவள் கொலுசின் முத்துகள் நான்கு
உதிர்ந்து போயிருக்கின்றன.
கண்ணாடியில் கூட ஒட்ட பசையற்று
அவள் பொட்டுகள் உதிர்கின்றன.
அவள் செருப்பின் உயரம்
குறைந்து கொண்டே வருகிறது.
அவள் சீப்பில் வெள்ளிக்கம்பிகள்
சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாத பட்ஜெட்டிலிருந்து பூக்கள்
காணாமல் போய்விட்டன.
இந்தக் கவனிப்பின்மையைப் பற்றிய
வருத்தங்கள் கூட இல்லாது போய்விட்டன..
ஆனால் நீங்கள் கவனிக்கிறீர்கள்
கொதிக்கும் குழம்பில் ரெண்டுகல் உப்பு
கூடியிருப்பதை.!!
இக்கவிதையை வாசித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? நான் பேச்சற்று பல நிமிடத்துளிகள் தவித்தேன். வாழ்க்கையை, அதில் ஒரு பெண்ணின் வலியை எவ்வளவு அழகாக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
இன்னும் எண்ணற்ற கவிதைகள் இவரது பக்கம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. வாசியுங்கள். வாசித்து வாழ்த்துங்கள் இம் மாபெரும் கவிஞனை.

அன்புச் சகோதரருக்கு ஒரு வேண்டுகோள். புத்தகம் படிக்கவும் சினிமாக்கள் பார்க்கவும் நேரம் அதிகமாக செலவு செய்யவேண்டியதுதான். அதற்காக உங்கள் இரசிகர்கள் எங்களை தவிக்கவைக்காதீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment