Tuesday 8 September 2015

பயணக்காதலன்


















தட தட சப்தத்துடன்
காடு மேடுகளைக் கடந்திருந்தவன் நான்

போகாத சாலைகளில்லை
பாயாதப் பள்ளங்களில்லை
சுமக்காத சுமைகளுமில்லை

அரிசி,தானிய, காய்கறிகள் முதல்
ஆடு, கோழிகள் வரை
குழந்தை குட்டியிலிருந்து
குமரி கிழவி வரை
என்னில் ஏறியமர்ந்து சென்றதாய்
பெருமையெனக்கு

ஒளியில்லாப் பாதைகளிலும்
விளக்கில்லாமலே விரைவேன்
குண்டும் குழியுமான இடங்களிலும்
ப்ரேக்கின்றிக் கடப்பேன்

பெரிய ஐயா வாழ்க்கையின்
ஒவ்வொருப் பக்கங்களிலும்
எனது பெயர் இடம்பெற்றிருக்கும்
அவரது பயணக்காதலன் நானென்று

வருடத்தில் ஓர் நாள்
பூஜைகள் நடக்குமெனக்கு
பிறநாட்களில்
மழை வெயில் பாராது
வீட்டின் முன்னே
கம்பீரமாய் நின்றிருப்பேன்

அவ்வப்பொழுது சிறு சிறு செலவு வைப்பேனேயன்றி
அவர்தம் கஷ்டங்களைக்
காணச் சகிக்க மாட்டேன்

இவை எல்லாம் இன்று காலை
அது நிகழும் வரை தான்
புதிதாய் மிடுக்காய்
பெரிதாய் ஒன்றின் மீதமர்ந்து
ஒய்யாரமாய் பவனி வந்த
பெரியவரின் மகன்

எனைக் குப்பையெனப்
பின்புறக்கட்டில் கொண்டு போட
எனதிருப்பிடம்
புதிய வருகையின் வசமானது

எனையேத் தானாக எண்ணியதால் தானோ
தாளாமல்
பெரியவரும் மூலையில் முடங்கிக் கிடக்கின்றார்
என்னைப்போல்...!!

No comments:

Post a Comment