Wednesday 23 September 2015

உணர்ந்திடு

என் நிறை குறையறிந்தவள் நீ
என் சுயம் பலம் புரிந்தவள் நீ

உற்றாரும் மற்றாரும் முகம் நோக்கி புகழ்ந்தும்
அழுக்காறால் புறம் நின்று இகழ்ந்தும் கடக்கையில்
உடலும் உயிருமாய் என்னுள் கலந்து
கர்ணக் கவசமாக காத்தவள் நீ

பெரும் நிலக் கண்ணிகளும்
பேரிடர் மனவழுத்தங்களும் கூடி
தோளேறி துவளச் செய்யுங்காலையில்
முதுகெலும்பாய் முட்டுக்கொடுத்து
நேர் நின்று நோக்கச் செய்தது நீ

மனப்பள்ளத்தாக்குகளில்
மடிந்து வீழ்ந்து முடங்கி கிடக்கையில்
நீர் வீழ்ச்சியாய் பாய்ந்து பரவியெடுத்து
பெருங்காற்றாய் தூக்கி சிகரத்திலிருத்தி
அழகு பார்த்ததும் நீ

குறும்புடன் விளையாடி
குதூகல நொடிகளில் சொல்லும்
சிறுபிழை பொறுத்தேயெனை
அள்ளி அணைத்து மகிழ்ந்தவளும் நீ

இன்றேனோ
நம்பிக்கையின்மையாலெனை நொறுக்குகிறாய்
சந்தேகம் கொண்டெனை சிதைக்கிறாய்
அன்பை மறைத்துவைத்து அயர்த்துகிறாய்

அன்பே
அத்தனையும் கடந்து போகட்டும்
எத்தனையோ பொய்யும் பொல்லாப்பும்
எனை துரத்தி வதைக்கட்டும்
எனதன்பு மெய்யென நீ உணர்ந்தால் போதும்

இப்பிறவி மட்டுமல்ல
இனிவரும் எப்பிறவியிலும்
உன் நினைவில் மட்டுமே உயிர்த்திருப்பேன்
உணர்ந்திடு….!

No comments:

Post a Comment