Wednesday 23 September 2015

Devi Rajan


எனக்கு முக நூலில் தொடக்க காலந்தொட்டு இருக்கும் வெகுசில தோழமைகளில் இவரும் ஒருவர். ஆரம்பகாலந்தொட்டே எனக்கு எழுத தூண்டுகோலாக இருந்து எனது எழுத்துக்களில் கவனம் செலுத்தி வருபவர். பல கவி நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதில், Devi Rajanக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.

நான் எழுதத் தொடங்குமுன்பே இவர் எழுதிக்கொண்டிருந்தார். எண்ணங்களில் உதிப்பவைகளை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வரும் ஜாலம் கற்றவரோ என எப்போதும் நான் எண்ணுவதுண்டு.

ரத்தினச் சுருக்கமாக மூன்று நான்கு வரிகளில் ஆழமான கருத்துக்களை புதைத்துவைத்து எழுதி வாசிப்பவர் கண்களை விரிய வைத்துவிடுவார்

வழுவி விழும் சொற்களுக்கு
வடுக்கள் பதிகிறது ஆழமாக
சொல்லின் ஆற்றலே நம்மில் மாற்றம்

எனும் இக்கவிதையில் ஆழமாக பதிந்தது வடுக்கள் மட்டுமா? வழுவி விழும் சொற்களுக்குள் சிக்கிய உணர்வுகளும்தானே

தோழமையின் குறும்புத்தனங்களிலெல்லாம்
இதழ்கடையோரம் கசியும் சிறு குறுநகை என்பது
வார்த்தைகளில் அகப்பட்டுகொள்ளா
குறும்பு கவிதை..

எனும் இக்கவிதையை வாசிக்கும்போதே நமது இதழில் குறுநகை ஒட்டிக்கொள்கிறது

அத்தனை பொய்களுக்குள்ளும்
மெய்யாய் புன்னகை பூத்திருந்தது
பனித்துளியொத்த குட்டி நேசமொன்று

மெய்யான நேசத்தை எத்தனை மென்மை படுத்தி மேன்மைபடுத்தியிருக்கிறார்

மனப்பிறழ்வானவளின் நேசம்
பறவையின் அடிவயிற்றுச்
சூட்டை ஒத்திருந்தது
குழந்தைகளை காணும் போது மட்டும்

தாய்பாசத்தை எத்தனை அழகாக சின்னஞ்சிறு கவிதைக்குள் பொதிந்துவிட்டார்.

அயர்வான தருணமொன்றில்
நேசம் பிடிபடாமல்
திணறிய அந்த தருணத்தில்
முத்துகளாய் கொட்டி கிடந்தன
நட்சத்திரங்கள் அருகிருந்த
அவளின் ஆற்றுப்படுத்துதல்
மனிதபதம் தாண்டி வசீகரித்தது

மனிதபதம் தாண்டிய ஆற்றுப்படுத்துதல் அதீத அன்பின் பொழிதலில் மட்டுமே வாய்க்குமல்லவா, எத்தனை இலகுவாக மொழிகிறார்.

இவையெல்லாம் இவரது எழுத்தின் சில பக்கங்களே

இவ்வளவு அழகாக எழுதும் இவரது எழுத்தாற்றல் மேலும் மேலும் ஓங்கி இன்னும் பல படைப்புகளை தந்து வானளாவிய புகழ் பெற நானும் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துக்களேன்

No comments:

Post a Comment