Wednesday 23 September 2015

கட்டாந்தரை

















காற்றலைந்த கட்டாந்தரை மேட்டில்
வீற்றிருந்த ஒற்றை மரத்தின் வேர்கள்
ஆழப் புதைந்து அகல விரிந்து
மண்ணின் சின்னச் சின்ன விரிசல்களை
இழுத்துப் பிடித்திருந்தன

என்றோ விதையூன்ற
காரணமாயிருந்த
கருங்குருவியின் சேயொன்று
தனதுரிமை எனக்கருதி
சிறு கூடொன்றை பணிந்திருந்தது

மரத்தின் பழங்களின்மேல்
மையலில்லாத மாரீசன்
குருவியையும் கூட்டையும் குறி வைத்து
அடிமரத்தை மாய்ந்து மாய்ந்து
வெட்டிக்கொண்டிருந்தான்

உடல்களைத்து உதிரம் சுண்டிப்போக
என்றோ வாங்கிவைத்து
எடுக்காமல் விட்டிருந்த
நஞ்சொன்றின் நினைவு வர
ஓடிச்சென்று எடுத்து வந்து
ஒவ்வொரு வேரிலும் விட்டு வைத்தான்

வீழ்ந்தது மரமும், குருவியும்
கூடும் மட்டுமல்ல
வேரிழந்த வெடிப்புகள் பெரிதாகி
கட்டாந்தரையே காணாமல் போய்விட்டது

No comments:

Post a Comment