Wednesday 30 September 2015

தவமிருந்தேன்

ஆழ்கடலில் மூச்சடக்கி
முன்னூறு வருடங்கள்
அவளைக்காண தவமிருந்தேன்.


மேனியெங்கும் செடி பூத்து
மேலுடையே புற்றாகி
ஆதி முதல்
அந்தம் வரை
அத்தனையும் காற்றாகி
அவளைத் தேடித் தேடி...


எங்கிருந்தோ ஓரு
மலர் வாசம்
உயிரின் வேரைத் தொட
திறந்தேன் கண்களை
எதிரிலென் தேவதை.


வெளிர் நிற ஆடையிலே
கூந்தலலை காற்றாக,
மலரிதழில் தேனூற,
கருவிழியாலெனைக் கவ்வ,
நின்றா: எதிரில்.


மூச்சடக்கிப் போனதனால்
மூச்சில்லாதவனாய்
பேச்சடக்கி இருந்ததனால்
பேசும் திறன் மறந்தவனாய்
புற்றும், செடியும், கொடியும்
புறந்தள்ளி எழ
முயற்சிக்க்க் கூட
இயலாமையால்


உள்ளத்து வேகத்தை
ஒருவகைப் படுத்தி
உந்தி எழுந்தேன்.
தொப்......
அம்மா,


பக்கத்து வீட்டு கடைக்குட்டி
குட்டிப் பிசாசு,
குறும்பின் சிகரம்,
என்மேல் கிடந்துறங்கிய
விஜிக்குட்டியும் நானும்
கட்டிலிலிருந்து
கீழே விழுந்து
முனகலானோம்.

No comments:

Post a Comment