Monday 28 September 2015

உணவை வீணாக்காதீர்



















மஞ்சள் காவியடித்து
மஞ்சம் புல்லால் கூரை வேயப்பட்டிருந்த
அவ்வகன்ற கிராமத்து வீட்டின்
கொல்லைப் புறத்தில்
வளைந்த மண் குலுமைகளிரெண்டில்
நிறைக்கப்பட்ட நெல்மணிகள் போக

காது வைத்த பெரிய அண்டாக்கள் நான்கிலும்
புகை மூட்டத்திற்கிடையில்
மாய்ந்து மாய்ந்து அவிந்து கொண்டிருக்க
விறகடுப்பின் வெக்கையில்
வெந்து கொண்டிருந்தனர்
நெல்லோடு அம்மாச்சியும் அம்மாவும்

பள்ளியிறுதி விடுமுறைக்கு போயிருந்த என்னை
முற்றத்துத் தரையில் கோரைப்பாயில்
மாமன்மகன் மோகனுடன்
தூங்கச் செய்திருந்தனர்

அவிந்த நெல்லின் வாசம்
நாசியைத் துளைக்க
நெடி தாளாது
உறக்கம் கலைந்து
மேல் கிடந்தவனின் காலை விலக்கி
பின்புறம் ஓடிப் பார்க்க

சூழ்ந்திருந்த புகைமண்டலத்தின் நடுவே
இருவரும் இருப்பதைக் கண்டு
தூக்கக் கலக்கத்திலிருந்த நான்
திகைத்த நொடி
போய்த் தூங்குடாக் குட்டி
என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு
மீண்டும் பாயில் உருண்டேன்

காலம் பல கடந்தாயிற்று
நாகரீகம் மாற்றிப் போட்டதில்
நகரத்தில் இன்று....

அடிக்கடி நினைவுகளில்
கிராமப் பெண்களின் கஷ்டநஷ்டங்கள்
கைகளில் சோறெடுக்கும் போதெல்லாம்
ஒவ்வொரு பருக்கைச் சோறும்
உணவை வீணாக்காதீர்களென
சொல்லிக் கொண்டே தான் இருக்கிறதின்றும்....

No comments:

Post a Comment