Friday 4 September 2015

மௌனக்கலை

















நடுக்கூடத்தில் நாக்கூசாத வார்த்தைகளால்
அர்ச்சிக்கும் தந்தையையும்
தனை காக்க
தற்காப்பு வார்த்தையரண் அமைக்கும் தாயையும்

விதிர்த்துப் போய் பார்த்து
விழிநீர் கசியும் தமக்கையையும்
என்றும் நடக்கும்
இயல்பான செயலென்று
எடுத்தெறிந்து போகவியலாமலும்
ஏதும் செய்யவியலாமலும்

தவிப்பினை தனக்குள் வைத்து தைத்து
முன் தினம் பேச்சுப்போட்டியில்
முதன்மை பெற்றதை சொல்லாமல்

மொழியுதிர்க்கா மௌனக்கலை கற்க
புத்தகத்தினுள் வழியுள்ளதாவெனத் தேடி

தன்னை புதைத்துக்கொள்கிறாளவள்

1 comment:

  1. மெளனம் "கலையா".கலையா? மோனத் தவமா?

    ReplyDelete