Saturday, 19 October 2013

அதிகாலை மழை



இரவின் முடிவில்
சட்டென ஒரு மழை,
உறங்கிக்கிடந்த என்னை
மேலும் தட்டித் தாலாட்டி
உறங்க வைக்கும் தாயாக,

இதமான குளிரால்
போர்வைக்குள்
மேலும் சுருண்டு
விரிந்த கனவு.

செயற்கைகளின்
அசைவில்லா நேரமது.
இயற்கையின் மடியிலோர்
இன்பத்தாலாட்டு.

உள்ளுக்குள் பனியுருகி
அருவியாய் பெய்ய,
வடித்தெடுக்க
காகிதமெடுக்கக் கூட
சோம்பிக் கிடந்த மனது.

எண்ணத் தூரிகையால்
வார்த்தை வண்ணம் கொண்டு
ஏக்கத்தை வெளிப்படுத்த
இஷ்டமில்லை.
(குணா கமலின்
கவிதைதான் காரணமோ?)

மழை நின்று
நீர்த்துளிகள் சொட்ட,
எங்கயோ போயிருந்த
பறவைகள் ஒவ்வொன்றாய்
என் தோட்டத்தில் திரும்பி வந்து
இசையெழுப்ப,

இனிமையான காலைதான்.

எனினும்,
இடையிடயே உன் நினைவு,
ஏக்கத்தின் வெளிப்பாடாய்
என் நீள் மூச்சு மட்டும்…..!

No comments:

Post a Comment