Saturday 19 October 2013

கடல்புறா—சாண்டில்யன் (என் கண்ணோட்டம்)




கடல்புறா—சாண்டில்யன்
(என் கண்ணோட்டம்)



















நான் நேற்றிரவு கடல்புறா மூன்றாவது பகுதியையும் படித்து முடித்தேன். (கடந்த ஒரு மாதமாக படிக்கிறேன்).
நான் சரித்திர ஆராய்ச்சியாளனில்லை. பள்ளிப்பாடங்களில் படித்த சரித்திரம் மட்டுமே நினைவுகளில். எனினும், படித்த கதைமூலம், நான் தெரிந்து கொண்டவை ஏராளம்.
சரித்திர நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்திருந்ததால் கதை உயிரோட்டமாகவே இருந்தது.
முதல் பகுதி, கலிங்க நாட்டில் வீர சாகசம்
இரண்டாம் பகுதி, அஷயமுனையில் சாமார்த்திய விளையாட்டு
மூன்றாம் பகுதி கடல் மோகினி மற்றும் ஸ்ரீ விஜயத்தின்மேல் படையெடுப்பு
முதலில் நான் அந்த கதை நாயகனைப் பற்றி கூறியே ஆகவேண்டும்.
இளையபல்லவன் எனும் கருணாகர தொண்டைமான்.
கதாசிரியருடைய கற்பனைத் திறனை முழுதும் பயன்படுத்தி இருக்கிறாரென்றே சொல்ல வேண்டும். முதல் பகுதியில் அநபாயருக்கு (குலோத்துங்கனுக்கு) துணையாக வந்தாலும், இளைய பல்லவன் தான் கதை நாயகன். துடுக்கும், துடிப்பும், முன்கோபமும் நிறைந்த கதாபாத்திரம்.
இரண்டாம் பகுதியில் மிகப்பெரிய மாற்றம். மிகுந்த நிதானமும், சாமார்த்தியமும், ஒரு தலைவனுக்கு வேண்டிய நுண்ணறிவும் நிறம்பப்படைத்தவனாக படைக்கப்பட்டிருந்தான்.
மூன்றாம் பகுதியில் மாநக்காவரத்தில் இளைய பல்லவனின் சாகசம், சாதுரியம், சாணக்கியத்தனம் எல்லாம் படிக்கும்போது எனக்கே இளையபல்லவன் நானாக இருப்பதாக உணர்வு. மாநக்காவரத்திலிருந்து கடாரம் நோக்கி செல்லும்போது, தமிழ் நாட்டின் பெருமையை சொல்லி, தான் தாய் நாட்டை எவ்வளவு நேசிக்கிறேன் என சொல்லும்போது, என் கண்களும் தளும்பின.
பின்னர் மலையூரில் கடற்படையெடுப்பு அற்புதம். அதற்குப் பின்னர்தான் கதை என்னைப்பொருத்தவரை தொய்வானது. இரண்டு பெண்களுக்கிடையே அல்லாடும் கதாபாத்திரமாகி, இளைய பல்லவனுடைய தோற்றம் கண்களிலே மங்கிப்போனது.
கதையோட்டத்தில் இரண்டு பெண்களை மிக அற்புதமாக செதுக்கியிருந்தார். கடாரத்து இளவரசி காஞ்சனாதேவி, அஷயமுனை இளவரசி மஞ்சளழகி.
படித்து முடிக்கும்போது அந்த பெண்களின் கதாபாத்திரம் மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் நமது வாழ்விலும் பெண்களின்றி எந்த செயல்களும் நடப்பதில்லையே! பெண்களே பின்புலமாக இருந்து நம்மை ஆட்டி வைக்கிறார்கள்.
மேலும், தமிழில் எந்த ஒரு காப்பியம் எடுத்துக் கொண்டாலும், அவையும் அகத்தையும், புறத்தையும் இணைத்தே பார்க்கின்றன. எனவே, இவ்விதத்தில் கதை அமைத்த கதாசிரியரை பாராட்டவே தோன்றுகிறது.
மேலும், கதாசிரியரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. கடற்பயணம், கடலில் போர் முறை, கப்பலின் (அந்த காலத்து) அமைப்பு, கடலில் காற்று, அலை, சூழ் நிலை இவற்றைக் கருத்தில் வைத்து இளைய பல்லவன் போர் புரியும் முறை, அப்ப்பா, மிக மிக அற்புதம்.
படிக்கும்போது, எனக்கு கப்பலில் பயணம் செய்வதாகவே உணர்வு.
மொத்தத்தில் கடல்புறா ஒரு மிகச்சிறந்த காவியம். (காவியமென்று சொல்லலாமாவெனத் தெரியவில்லை. எனினும், இந்த கதைக்கு அந்த தகுதி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது)
 






2 comments:

  1. Ithuvarai padithathilai, but padika thoondugirathu ungalathu vimarsanam. I'll try 2 read it..

    ReplyDelete
  2. அருமையான உயிரோட்டமான முன்னோட்டம்
    மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்
    என்ற ஆவல் , தகவலுக்கு நன்றி

    ReplyDelete