Sunday 20 October 2013

கவிதையில்லை

















மாலை வேளை,
மதி மயங்கும் மலர் சோலை,
பூக்குவியலின் நடுவே
சிறிய நடை பாதை,
நீயும், நானும்
கரம்கோர்த்து,
கதை பேசி,
மகிழ்வாய் பூத்திருந்த
மந்தகாச வேளை….

வானத்தில் பூத்த
வானவில்லைக் காட்டி,
உனக்குப் போட்டியாய்
வானப்பந்தலின்
வண்ண ஓவியம்,
அழகுதான்,
எனினும்,

உன்னிரு கண்ணசைவில் படைக்கும்
காவியத்தின் சுவையங்கு இல்லை.
பிறை நுதலில் தெளியும்
ஒளி பிம்பமில்லை.
நாசியிலே மலரும்
சுக வாசமில்லை.
கனியிதழின் சாரம்
கடுகளவுமில்லை.
கருங்கூந்தல் முகிலும்,
கரும்பென்னும் உடலும்,
எனை வென்ற மனமும்….,
கண்ணே மொத்தத்தில்
நீதான் அழகின் எல்லை,
என்றதும்,

என் கைகளில் கோர்த்த உன்
விரல்கள் சொன்ன கவிதைக்கு
ஈரேழு உலகத்திலும்
இனியொரு கவிதையில்லை.

1 comment:

  1. சுகமான காதல் சுவையும்
    இதமான ரசனையும்
    பொருந்திய காதல் காப்பியம்

    ReplyDelete