Friday 6 December 2013

எந்த ஒன்று?

பிறவிகள் பலவும்
எனக்கு நீ,
உனக்கு நானென்று
ஒன்றிணைந்த
வான் பறவைகளாய்
வாழ்ந்திருந்த நமக்கு,

இப்பிறவியில்
அன்றுதான்
கருவிழிகளின்
முதல் சங்கமம்!

விழியிருந்து பறிபோன
பார்வையினை
மறுபடியும் பெற்றவனின்
பார்வையில் விரியும்
இயற்கையின் பசுஞ்சோலையாய்,

எல்லையில்லா பனித்தீவின்
எல்லையைத் தொட்டவனின்
பார்வையில் பட்ட
தொடுவான
ஒளிவிளக்காய்,

ஆண்டுகளாய் தவமிருந்து
பெற்றவளின் கைகளில்
தவழும்
சிறு குறிஞ்சிப் பூவாய்,

அன்றுதான்னுன்னை
முதன்முதலில் கண்டேன்.

கண்ட நொடி,
என் கண்கள்
எப்படியோ எனை விட்டு
உனைத்தேடி
ஒட்டிக் கொண்டன.

என் கழுத்து
வேறெங்கும் திரும்பாமல்
உன் திசையில் மட்டுமே
நங்கூரமிட்டிருந்தது.

என் கால்கள் உனை நாடி
நகர நினைத்தும் நகராமல்
நதியின் நடுவில்
அகப்பட்டதாய்
நிலையற்றிருந்தது.

எல்லாம் சரி,
என் மனமெங்கே?
எப்போதோ எனைவிட்டு
ஆகாயம் தேடி
அந்தரத்தில் பறந்து,
விண்மீனைக் கண்டு,
மேகங்கள் தொட்டு,
வானிலவில் பட்டு,
தெறித்து,
திரும்பி,
மண்ணிலுலவும்
பொன்னிலவு உன்
மனம் கண்டு
ஒட்டிக் கொண்ட்து.

இரண்டு மனம்
உனக்கெதற்கு?
ஒன்றெனக்குத் தா!
எந்த ஒன்று?

No comments:

Post a Comment