Sunday 15 December 2013

வெல்வோம் வா!

வெற்றியென்றும் தோல்வியென்றும்
வாழ்க்கையிலே எதுவுமில்லை,
இன்றெனக்கு தோல்வியது
உந்தனுக்கு வெற்றியென,
நாளையுந்தன் தோல்வியது
எந்தனுக்கு வெற்றியென,
வாழ்வென்னும் கூட்டினிலே
மகிழ்வென்னும் பந்தலிட
வெற்றியினை வரவேற்று,
தோல்வியதை தவிர்த்திடுவர்.

அத்தனையும் மனப்பூச்சு,
அடுத்தவனின் தோல்வியிலா
என்வாழ்வு இனிப்பாச்சு?
உனக்கென்றும், எனக்கென்றும்
எதுவுமில்லா உலகத்தில்,
ஓடி ஆடி உதைத்திடித்து,
பெறுவதெலாம் வெற்றியென
பெருமிதம் நாம் கொள்வோமோ?

உன்வலியில் என் கண்கள்
வடித்தெடுக்கும் கண்ணீரில்
உள்ளதடா உண்மையிலே
நம் வாழ்வின் ஆனந்தம்.
தோல்வியதும் வேண்டாம்,
வெற்றியதும் வேண்டாம்.
தோள் கொடுத்து ஒன்றாய்
வாழ்க்கையினை வெல்வோம் வா!

No comments:

Post a Comment