Friday 6 December 2013

பொய்க்கோபம்



பொய்க் கோபச் சிதறல்களை
கனிமொழியில் கலந்து,
கண்வழியே காதல்
அம்புகளைச் சுமந்து,
வெம்மையினைக் காட்டி
விலகிப் போக முயன்றாள்.

செவி வழியே பருகி,
விழி வழியே சிரித்தேன்.
தவறன்றோ?
பொய் விலகி மெய்யானது,
மெய் நடுங்க கண் சிவந்தாள்.

அச்சச்சோ, இனி
அவள் கோபம் தீரும்வரை
அணுவளவும் மொழியாமல்
மௌனம் அடை காப்பாள்.
ஆபத்து..!

என் செய்ய?
தாவியவள் கரம் பிடித்தேன்.
தனியிரவின் வான் பொழியும்
ஒளிர் நிலவைக் காட்டி,
அருகிழுத்தேன்1

நிலவின் பிரியையவள்,
பொன்னொளியின் பேரழகில்
மின்னுகிறாய் கண்மணியே!
உனழகின் சிந்தனையில்
மதிமயங்கி மறந்தேன் நான்,
நாளை அவ்வேலை
நிச்சயமாய் முடிப்பேன் பார்,
இப்போது கோபம்
தவிர்த்திடடி என்னமுதே,
என்றணைத்து,

இடையணைத்து,
செங்கன்னத்தில் என்னிதழை
பொருத்தியதும் குளிர்ந்தாள்.
வான் நிலவும் வெட்கி
தனை ஒளித்தாள்!

No comments:

Post a Comment