Friday 6 December 2013

அந்தமான்


தமிழர்களால் தீமைத்தீவு என அழைக்கபட்டதும், வெளி நாட்டுப் பயணிகளால் வினோத மனிதர்களும், மனித உண்ணிகளும் வாழ்வதாகக் கருதப்பட்டதும், ஆங்கிலேயர்களாலும், பின்னர் ஜப்பானியர்களாலும் ஆளப்பட்டதுமான அந்தமான், நிக்கோபார் தீவுக் கூட்டங்கள் நோக்கிய எனது சுற்றுலா பயணம் சனிக்கிழமை காலை விமானத்தில் துவங்கியது.
அதன் தலை நகரமான போர்ட் ப்ளேயரில் வீர் சவார்க்கர் விமான தளத்தில் சென்று இறங்கியபோது காலநிலை நமது தமிழகத்தைப் போன்றேதான் காட்சியளித்தது. எங்கள் தங்கும் விடுதிக்கு எங்களைக் கொண்டு சென்ற வாகன ஓட்டி, ஹிந்தி பேசுபவராக இருந்தார்.
அங்கு அனைவருமே ஹிந்தி பேசுகிறார்கள் என பின்னரே புரிந்தது. எனக்கு ஹிந்தி தெரியாதது ஒரு குறையாக உணர ஆரம்பித்தேன். நல்ல வேளை எங்களுடன் வந்த நண்பர் குடும்பத்தில் அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தது.
விடுதியில் சிறிது ஓய்வெடுத்ததும், நாங்கள் கார்பின்ஸ்கோ (corbyn’s cove beach) பீச்சை சென்றடைந்தோம். இரு தினங்களுக்கு முன்புதான் புயல் வந்து கடற்கரையை சேதம் செய்திருந்ததாக தெரிவித்தனர். கடற்கரை மணலில் கருப்பு வண்டல் நிறம் கண்டேன். கடற்கரையில் போட்டிருந்த சாய்ந்து படுத்து சன்பாத் (sun bath) எடுக்கும் ஆசனங்கள் சிதிலமடைந்ததால் அப்புறப்படுத்தப் பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.
அங்கு, போட்டிங்க் போக அழைத்தார்கள். குடும்பமாக போகலாமென சொன்னார்கள். எங்கள் குடும்பம் ஒரு படகிலும், நண்பர் குடும்பம் ஒரு படகிலும் சென்றோம்.
அலைகளின் மேல் படகு எழுவதும், பின் சரேலென வீழ்வதும் தொடக்கத்தில் அனைவரையும் திகிலடைய செய்தது. (நான் அவ்வளவாக பயப்படவில்லை. நம்புங்கள் நண்பர்களே) படகு வேகம் கூட்ட, கூட்ட, எழுவதும், வீழ்வதும் நாங்கள் கூச்சலிடுவதுமாக மிகுந்த உற்சாகமாய் இருந்தது. ஒரு 5 நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, எங்களை ஒரு தீவின் அருகில் நிறுத்தி, அந்த தீவின் பெயர் ஸ்நேக் தீவு எனக் கூறினர்.
பின்னர் திரும்பக் கரையில் கொண்டு விட்டனர். சற்றுத் தொலைவில் கடலில் ஸ்பீட் ஸ்கூட்டர் ஓட்ட அழைத்தனர். என்னவோ, வேண்டாமென்று தவிர்த்துவிட்டு திரும்பினோம்.
பின்னர், போர்ட் ப்ளேரின் புகழ் பெற்ற செல்லுலர் ஜெயிலுக்கு பயணமானோம்.
கார்பிஸ்கோவ் பீச்சிலிருந்து செல்லுலர் ஜெயிலுக்கான பாதை, இன்னமும் என் மனதில் மின்னுகிறது. வலது புறம் கடலும், இடது புறம் மலையுமாக, நீண்டும், வளைந்தும் சென்ற சாலை, ஆங்கில ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்த சாலைகளை நினைவூட்டியது. (எப்படி நமது திரைப்படத் துறையினர் அந்த சாலையை இன்னமும் விட்டுவைத்திருக்கின்றனரெனத் தெரியவில்லை)
சிறைச்சாலை (காலா பாணி) திரைப்படம் பார்த்துவிட்டு கண்ணீர் உகுத்தபடி வீடு திரும்பியது மனதில் நிழலாடியது. அங்கு லைட் மற்றும் சவுண்ட் ஷோ காண டிக்கட் வாங்கி உள்ளே போனோம். அங்கும் ஹிந்தி அறியாததால் பாதிப்பு ஏற்பட்டது. வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே, ஆங்கிலத்திலும், மற்ற நாட்கள் ஹிந்தியில் மட்டுமே அந்த ஷோ நடத்தப்பெற்றது.
சுதந்திரப் போராட்டத்தினைப் பற்றியும், வீர சவார்க்கரைப் பற்றியும், அந்த ஜெயிலைப் பற்றியும் உருக்கமாக அவர்கள் சொன்னாலும், மொழி அறியாததால் அன்னியனாகிப் போனேன். மனதிற்கு வருத்தமாக இருந்தது.
மையத்தில் கண்காணிப்பு கட்டிடமும், ஏழு நீளமான மூன்று அடுக்குமாடி கட்டிடங்களும் கொண்ட செல்லுலார் ஜெயிலில், மொத்தம் 693 அறைகள் இருப்பதாக சொன்னார்கள். ஒவ்வொரு அறையும் 15 அடிக்கு, 9 அடி அளவிலும், ஒற்றை சாளரம் (10 அடி உயரத்தில்) கொண்டும் அமைந்திருப்பதாக சொன்னார்கள்.
அந்த சிறைச்சாலை 1896ல் கட்டபட்டு 1906ல் முடிவுற்றதாக சொன்னார்கள். பர்மாவில் இருந்து செங்கற்களை கொண்டு வந்து கட்டியதாக சொன்னார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் அங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை 1857லிருந்தே அங்கு கொண்டு செல்ல ஆரம்பித்து இருந்தனராம்.
அந்த கருப்பு நீரென (கால பாணி) அழைக்கப்பட்ட சிறைச்சாலையில் உயிரிழந்தோர் பல ஆயிரம் இருக்கும். அவ்வாறு துன்பப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை நாம் இன்று உண்மையில் அனுபவிக்கிறோமா?
அங்கிருந்த்து நாங்கள் அன்று விடுதிக்கு சென்று உறங்கினோம். நல்ல உணவு எங்கள் விடுதியில் கிடைக்கப்பெற்றது. பெரும்பாலும் ரொட்டி வகைகளும், நான் போன்றவைகளும், மீன், கோழி என்று இறைச்சிகளுமே கிடைத்தன.
இவ்வாறாக எங்கள் முதல் தினம் நிறைவுற்றது.
(புகைப்படம்- ஸ்நேக் தீவு)

No comments:

Post a Comment