Sunday 22 December 2013

முற்றுப் பெறாத கவிதை

கற்பனை வானில்
கவிதை எழுத
காலங்கள் கடந்து சென்றேன்.
கார்முகிலும்,
காற்றினிலாடும் தூளியாக,
என் மேனியை வருடி விட்டு
வண்ணங்களை மறைத்து
காரிருளை படைத்து
கண்ணாமூச்சி
விளையாட நினைத்தது.

எங்கினும் பசுமையாய் தோன்றிய வயல்கள்
இருண்ட தேசமாக,
எவ்வழியும் கருமையாய்,
தனிமையை போர்த்துக் கிடக்க,
மலைகளின் விரலிடை
வழிந்த நதிகளும்
வானக் கருமையை நோக்கி
விம்மியபடி இருந்தன.

ஒளி சிந்தி
ஊர்வலம் போன
சிவப்புச் சூரியனும்
கரியக் கனவுகளை
கலைக்க இயலாமல்
ஒளிந்து விளையாடி
கரைந்து காணாமல் போனான்.

பரந்து விரிந்த சோலைகளில்
பாடித் திரிந்த பறவைகளும்
தென்றலின் இனிமை குலைந்து
கொடுங்கோல் காற்றைக் கண்டு
விரைந்து கூடடைந்தன.

அத்தனைக்கும் மசியாத
கற்பனை வாகனம்
வாடாத கவிமலரை
தீந்தமிழில் கோர்த்தெடுத்து
சிதறாமல் வடித்தெடுக்க,
சிந்தனை பறந்து
சேகரம் செய்த கவிதை
அம்மாவின் அழைப்புக் குரலால்
முற்றுப் பெறாத கவிதையாய்
முடிந்தே போனது!
 


No comments:

Post a Comment