Monday 30 December 2013

வீணை

அந்த பழைய மாளிகை ஏலத்திற்குப் போவதை அறிந்து கனவான்கள் பலபேர் அங்கு குழுமி இருந்தனர். தந்தையையும், தாயையும் ஒருசேர இழந்த ரவிவர்மன் அந்த மாளிகையின் அகண்ட வரவேற்பு அறையின் கிழக்குச் சாளரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தான்.
முதலில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளாய் ஏலத்திற்கு வர, கட்டியங்காரர் ஏல விலையினைக் கூற வந்திருந்த கனவான்கள் ஒவ்வொன்றினுக்கும் ஒரு விலையைக் கூறி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக அந்த வீட்டின் வரவேற்பு அறையில் மூலையில் வீற்றிருந்த ஒரு பழைய காலத்து வீணை ஏலத்திற்கு வந்தது.
எடுத்து வந்து எல்லோருக்குமாய் காட்டி விலை கூற ஆரம்பித்தார் கட்டியங்காரர். ஏனோ, அந்த வீணையை விலை பேசி வாங்க அங்கு எவருமே தயாராயில்லை. நேரம் கடந்தது. இறுதியில் அப்பொருளை ஏலம் விடுவதில்லை என முடிவெடுத்து விலை போகாத பொருளென்று மூலையில் வைக்கப் போயினர்.
அப்போது அங்கு கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் எழுந்து சென்று அந்த வீணையை எடுத்து, அதன் நரம்புகளை முறுக்கி, வீணையைத் துடைத்து, மடியில் வைத்து வாசிக்க ஆரம்பித்தார்.
வீணையின் அழகிய நாதம் எழும்பி அவ்வறையை வியப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த அத்தனை பேரும் அந்த இன்ப நாதத்தில் தன்னை மறந்தனர். ஒவ்வொரு நொடியும் அதன் உன்னத இசை அங்குள்ளவர்களின் உள்ளத்தில் இன்பத்தை வெள்ளமென பாய்ச்சிக் கொண்டிருந்த்து.
திடீரென்று இசைப்பதை நிறுத்தி விட்டு பெரியவர், வீணையை கட்டியங்காரரிடம் கொடுத்துவிட்டு தன்னிருகையில் வந்து அமர்ந்தார்.
சாளரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த ரவி வர்மனின் கண்களில் அருவியென கண்ணீர் பெருகி ஒழுகியது.
வீணையை மீண்டும் ஏலத்த்ற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த வீணைதான் அங்கு அதிகபட்ச விலையில் போனது என்று கூறவும் வேண்டுமா?>

No comments:

Post a Comment