Sunday 15 December 2013

நட்பின் உயிரொலி














நினைவு மடல்களில்
நித்தம் ஒரு கவிதை
எழுதிய காலமது.
உயிர் கொடுத்த
உறவுகளை விட்டு,
உயிரென மலர்ந்த
புதிய மலர்களாய்
பூத்த நட்புக்கள்.

எந்நேரமும்
எங்கு சென்றிடினும்,
எந்த சூழலிலும்,
என்னை விட்டகலாத
ஒன்றாய் பிறந்ததாய்
உணர்ந்திருந்த நேசங்கள்.

உனக்கென நானும்,
எனக்கென நீயும்,
கதைகளிலும்,
காதலிலும்,
காண்பதற்கு முன்பே
வாழ்ந்திருந்த காலங்கள்.

சிரிப்பதற்கும்,
துயர் துடைப்பதற்கும்,
துணை நடப்பதற்கும்,
தன்னலமற்று வாழ்ந்திருந்த
பாசமிகு வசந்தங்கள்.

விடுதியறை,
விளையாட்டுக் கூடம்,
தேநீர்கடை,
திரையரங்கு,என,
வட்டமிட்ட பட்டாம்பூச்சிகளாய்,
வாழ்வின் வரமான
வண்ணமிகு கோலங்கள்.

வாழ்வின் வலிகளை அறியாமல்,
தோல்வியை பெரிதென்று நினையாமல்,
படிப்பறையில் கூட
சிரிப்பலையில் மூழ்கி,
கூட்டணியின் பலம் கண்டு மகிழ்ந்திருந்த
சுகமான சிந்தனையில்
பெருமழையாய் பொழிந்திட்ட,
பொன்னான தருணங்கள்.

இன்றெனக்கு
இவையெவையுமில்லை,
என்றேனும் ஒரு நாள்,
தொலைபேசியில் அழைத்து,
தொல்லையெனக் கூறுமுன்னர்
துண்டித்துப் போகும்
தோலை தூர விசும்பல்கள் மட்டுமே
நட்பின் உயிரொலியென
நித்தம் கேட்டபடி,
நினைவடுக்குகளில்
நிழலாடும் கவிதைகளை
சுமந்தபடி போகிறேன்!

No comments:

Post a Comment