Saturday 18 May 2013

சொந்தக்காரி



என் இதயத்தை வனமாக்கி
சீதையாய் உனையெண்ணிச்
சிறை பிடிக்க நான்
ராவணனில்லை...
இதயத்தை கோவிலென
உனையங்கு தெய்வமென
பூஜிக்க நான்
பூஜாரி யும் இல்லை.
உள்ளத்து ரணங்களிலே
மென் பாத மலர் பட்டு
வலி மாறலாகாதோ என ஏங்கும்
எண்ணற்ற பாமரனில்
நானும் ஒருவன்.
ஓரிரவில் போவதல்ல
உள் ரணங்கள்...
ஒவ்வொன்றும்
பதியமிட்ட நாற்றாய்,
பரிணமித்த விதைகளாய்,
விழுந்து, வளர்ந்து
வேர்களும், விழுதுகளும் கொண்ட
ஆல மரமாய்....
மனச் சுவரின் வண்ணமெல்லாம்
வெளிரிப் போய்...
கலவர பூமியில்
அகப்பட்ட குழந்தையாய்
இருந்த நான்,
அதிகாலையில்,
கடும் கோடையில்
சில சமயம் தோன்றும்
குளிர் காற்றாய் நீ வந்தாய்.
பனித்துளிகள் படர்ந்த
ரோஜாவை அம்பாக்கி நீ வீச
என்னிதய ரண மரங்கள்
ஒவ்வொன்றாய்
வேரற்று வீழ்ந்தன.
வெளிறிப் போன இதயச் சுவர்கள்
மலர்கண்ணின் ஒளி கொண்டு
புது வண்ணம் பெற்றன.
உள்ளத்துள் நுழைந்த நீ
உன் கனிந்த மொழியாலும்
உற்சாகச் செயலாலும்,
எனை மாற்றி,
புது மனிதனாக்கியதால்,
எனை பெற்றெடுத்த தாய்க்கடுத்த
இரண்டாம் தாய் நீயானாய்.
உன் சேயாய் நானானேன்.
முள் படர்ந்த வனம் நுழைந்து
களையெடுத்து,
நல் விதைகளிட்டு
அன்பு நீர் பாய்ச்சி,
வண்ண மலர்கள்
பூத்துக் குலுங்கும்
சோலையாய் மாற்றிய நீ
தோட்டக்காரி மட்டுமல்ல...
என் இதய வீட்டின் சொந்தக்காரி...

No comments:

Post a Comment