Tuesday 28 May 2013

ஓர விழிப் பார்வை



பட்டுத் துகிலிழைய,
கட்டுக் குழலலைய,
எட்டிப் பார்ப்பதென்ன,
மொட்டுப் புது மலரே!

கண்ணில் ஒளியேற்றி
கவிதை மெருகூட்டி,
விரிந்த மலராக்கி,
விழிகள் காண்பதென்ன?

ஓர விழிப் பார்வை,
குவிந்த இதழ் கோவை,
துடிக்கும் விழி இமைகள்
வண்ணத் தூரிகையோ!

ஆப்பிள் கன்னத்தில்
இதயம் நிலையுதடி,
அதரச் சுவையினிலே
மதுரம் வடியுதடி!

தனிமை இரவுகளில்
நிலவின் வடிவழகில்
நேசம் கொண்டிருந்தேன்,
உன்னைக் கண்ட நொடி
கவிதை வானுலகின்
நிலவாய் உனை வடித்தேன்.

வண்ண விண்மீன்கள்
உதிரும் மென் மலர்கள்
உன்னைக் கண்டவுடன்
அழகை இழந்ததடி!

இதய மெல்லிசையில்
உனது பெயர் சூடி
எழுதும் கவிதைகளின்
எண்ணம் ஒரு கோடி!

என்னுள் எனை யிழந்து
உன்னில் எனை வரைந்து
உன்னை எனதாக்கும்
நாளை வேண்டுகிறேன்!

No comments:

Post a Comment