Monday 27 January 2014

ஆபித் சுர்தி

ஒரு சிறு பொறி இவ்வுலகையே மாற்றவல்லது என்பதற்கு இவ்வுண்மை கதை நல்ல உதாரணம்

ஆபித் சுர்தி, ஒரு வித்தியாசமான மனிதர். 1935, மே 5 ஆம் நாள் பிறந்த குஜராத்தியான இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், ஓவியர். இவர் 1993ல் எழுதிய ஒரு புத்தகத்திற்காக தேசிய விருது வழங்கப் பட்டது.
எனினும் உலக அளவில் இவர் புகழப்பட காரணம், இவரது ஒரு சிறு முயற்சிதான். அதற்குக் காரணமாய் அமைந்தது அப்போது ஐ நாவின் தலைவராக இருந்த புட்ரொஸ் புட்ரோஸ் காலியின் கருத்தை இவர் படிக்க நேர்ந்ததுதான். 2025ல் உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அதீத தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுமென சொல்லி இருந்தார். ஆபித் சுர்திக்கு தனது பால்ய நினைவுகளும், தண்ணீருக்கு அப்போது அவர்கள் பட்ட பாடும் நினைவில் வந்து முட்டின.
அதே சமயம் ஒரு நண்பர் வீட்டில், அவர் குளியலறையில் ஒழுகும் குழாயைக் கண்டு, அதை சரி செய்யக்கூடாதாவென கேட்ட போது, நண்பரின் பதில் ஆபித் சுர்தியை சிந்திக்க வைத்தது.
நண்பர் சொன்னார், “ஒரு குழாய் சரிசெய்யும் ஆளை கொண்டு இந்த சாதாரண ஒழுகலை சரி செய்ய இயலாது, அது விலை மிகுந்த செயலாகும், மேலும் இந்த செயலுக்காக குழாய் சரி செய்யும் ஆள் வரமாட்டான்” என்று.
ஒரு வி நாடிக்கு ஒரு சொட்டாக வடியும் நீரால் நாம் ஒரு மாதத்தில் 1000 லிட்டர் நீரை இழக்கிறோமென எங்கோ படித்தது அவர் மனதில் நிழலாடியது.
அவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு குழாய் சரி செய்யும் ஆளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் ஒவ்வொரு அடுக்குமாடியாக சென்று, ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி, குழாய் ஏதும் ஒழுகுகிறதா? ரப்பர் இணைதடுப்பான் (ரப்பர் ஒ ரிங்க்) ஏதும் மாற்ற வேண்டியுள்ளதாவென சோதித்து சரி செய்து கொடுக்க எண்ணினார். பணம் தேவை பட்டது.
நல்லெண்ணம் இருந்தால் எல்லாம் கூடிவருமென சொல்வதற்கு ஏற்ப, அந்த சமயத்தில் ஹிந்தி எழுத்துக்கு அவருக்கு எதிர்பாராதவிதமாக 1 லட்சம் ரூபாய் பரிசு பணம் வழங்கப்பட்டது.
உடனே செயல்பட்டார். ஒரு குழாய் சரி செய்யும் ஆளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு குடியிருப்பை அணுகி குழாய்களை சரி செய்து கொடுக்கத் தொடங்கினார். ஆம், இலவசமாகத்தான்.
அவரது ஒரு மனித அமைப்பிற்கு Drop Dead என பெயரிட்டு Save every drop or Drop Dead என வாசகத்தை தனது அமைப்பிற்குப் பொருத்தினார்.
முதல் வருட முடிவில் அவர் 1533 இல்லங்களில் கதவுகளை (மனக்கதவுகளையும்தான்) தட்டியிருந்தார். 400 குழாய்களுக்கும் மேல் சரி செய்திருந்தார்.
சிறிது சிறிதாக செய்தித்தாள்களிலும், மீடியாவிலும் அவர் புகழ் பரவத் தொடங்கியது. 2010ல் CNN IBN BJ வின் Be the change (மாற்றமாயிரு) எனும் விருது வழங்கப்பட்டது. அதே வருடம் பெர்லினிலிருந்து வந்த ஒரு தொலைகாட்சி குழு அவரை காலை முதல் மாலை வரை ஒரு ஞாயிறில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
2013ல் அவர் வசித்த பகுதியில் 40 வருடங்களில் மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு வருமென அறிவிக்கப்பட்டு, அந்த மா நில அமைச்சர்கள் ஒன்று கூடி, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முனைந்து கொண்டிருந்தபோது, இந்த சாதாரண மனிதர், தனது சுய நலமற்ற தொண்டால், சிறு முயற்சியால் எவ்வளவு தண்ணீரை சேமித்திருப்பார் என சொல்லவேண்டுமா?
வாழ்க ஆபித் சுர்தி, அவரைப்போல் நாமும் ஏதேனும் செய்து ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டுவர முயல்வோமா

No comments:

Post a Comment