Monday 13 January 2014

போகியாய்

அவளுக்கு கோபமென்றால்
அப்படியொன்றும்
பாத்திரங்கள் பறக்காது,
வார்த்தைகளும் நொறுங்காது.
உணவேதும் வருந்தாது.
இறுக்கமாய் சூழல்
மாறிப்போகும்,
இளஞ்சூடு எங்கும்
பரவி நிற்கும்.
வார்த்தைகளெங்கும்
வறண்டிருக்கும்.

அன்றுமவளப்படித்தான்,
எதற்கந்த கோபம்?
எத்தனை கேட்டும்
பதிலில்லை.
கோப்பையில் தேநீர்
வழிந்தது
அன்பின் சுவையின்றி,

எழுந்து சென்று
இடைபற்றியிழுத்து
என்ன கோபமென்றேன்.
நேற்றிரவு அவள்கேட்ட உதவியை
செய்யாமற்போனதும்,
அதனால் வந்த சிறு சலசலப்பும்,
அப்பொழுதே நான்
மறந்துவிட்டிருந்தேன்.

அவளதையெடுத்து
மூளையெங்கும்பரவ விட்டு
முகஞ்சுளித்தபடியிருந்தாள்.
எனக்கோ,
அவளென்ன உதவி கேட்டாள்,
என்னவிதமாய் ஊடல் வளர்த்தோமென
நினைவடுக்குகளிலேதுமில்லை.
அதன்பின் நடந்த
கூடலே வியாபித்திருந்தது.

கைப்பற்றி கொண்டுபோய்
புறத்தோட்டத்திலிருத்தி,
பூக்களின் மென்மையை
அவள் மனத்துடனிணைத்து
துளியாய் அரும்பிய உதடின்
வியர்வையை துடைத்து,
அன்பே, எனக்கிது
குறையோ? அறியேன்.
மறதியின் பிடியில் நான்,
ஊடல்கள் பிடிக்குமெனினும்
உள்ளத்தில் நிலைப்பதில்லை,

பாரங்கள் சேரச் சேர
மனச்சுமை நமை
மாய்த்துவிடும்.

என்றும் போகியாய்
ஊடலை அன்றே கொழுத்தி
உள்ளத்தை மலர்த்துவோம்,
இன்றெனில்,
இன்றைய ஊடல்
இனிப்பற்று போகும்.

வாழ்தலினிதே!
வாயென்னுயிரே!

No comments:

Post a Comment