Monday 27 January 2014

ஏடாகூடம்

அந்த காட்டில் ராஜா சிங்கம் தன் கண் முன் அகப்பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடி கொன்று புசித்து வந்தது. அதைக்கண்ட வனவிலங்குகள் ஒன்றுகூடி தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து, சிங்க ராஜாவிடம் போய் முறையிட்டன.
“ராஜா, நீங்கள் இவ்வாறு கண்ணில் படுகின்ற மிருகங்களையெல்லாம் வேட்டையாட வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு விலங்கென நீங்கள் உண்ணலாம்” என்று கூறின.
அதைக்கேட்ட ராஜா மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தது. சிங்க ராஜா சொன்னது, “எனக்கு நகைச்சுவை மிகவும் பிடிக்கும், எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு ஒரு நகைச்சுவை துணுக்கை கூறவேண்டும். அதைக்கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மிருகம் சிரிக்கவில்லையெனினும், நான் அந்த நகைச்சுவை துணுக்கை சொன்ன விலங்கை கொன்று புசிப்பேன்” என்று.
அனைத்து விலங்குகளும் ஒப்புக்கொண்டன.
அடுத்த நாள் ஒரு நரி நகைச்சுவை துணுக்கை சொல்லவேண்டி வந்தது. நரியும் மிகுந்த ஆராய்ச்சியில் இறங்கி, சிறந்த நகைச்சுவை துணுக்கொன்று கண்டு பிடித்து, ராஜாவின் முன் வந்து நின்று சொன்னது. கேட்ட எல்லா மிருகங்களும் பெரிய அளவில் இடி இடியென சிரித்தன.
ஆனால் ஒரு ஆமை மட்டும் சிரிக்காமல் இருந்தது. அதைக்கண்ட சிங்க ராஜா, நமது ஒப்பந்தப்படி, ஒரு விலங்கு சிரிக்கவில்லையெனினும், நான் அந்த நகைச்சுவை துணுக்கை சொன்ன விலங்கை கொன்று தின்னவேண்டுமெனக் கூறி, அந்த நரியை கொன்று தின்றது.
அடுத்த நாள் ஒரு மான் மிகவும் தேடியலைந்து ஒரு நகைச்சுவை தேடியெடுத்து வந்து சிங்க ராஜா முன் கூற அனைத்து மிருகங்களும் காடே அதிர சிரித்தன அந்த ஆமையைத் தவிர. மானும் சிங்க ராஜாவுக்கு இரையானார்.
அடுத்த நாள் கரடி நகைச்சுவை துணுக்கை சொல்ல வேண்டிய நிலை. பயத்தில் அந்த கரடிக்கு எந்த நகைச்சுவை துணுக்கும் தோன்றவில்லை. தான் இறப்பது உறுதியென நினைத்தபடி வந்து சிங்க ராஜா முன் நின்று, “அது வந்து ராஜா.........” என்று ஆரம்பித்த நொடி, அந்த ஆமை கபகபவென சிரிக்க ஆரம்பித்தது. ஆமை சிரிப்பதை பார்த்த மற்ற விலங்குகளும் ஒவ்வொன்றாய் சிரிக்க ஆரம்பித்தன. எல்லா மிருகங்களும் சிரிப்பதைக் கண்ட சிங்கமும் சிரிக்க, அதிசயமாக அந்த கரடி உயிர் பிழைத்த்து.
இறுதியில் சிங்க ராஜா ஆமையை அழைத்து, கரடி எந்த நகைச்சுவையையும் சொல்லவில்லையே, பின் எதற்கு சிரித்தாயென கேட்க, ஆமை சொன்னது, “அது வந்து ராஜா, அன்னைக்கு அந்த நரி சொன்ன சொன்ன நகைச்சுவை துணுக்கை நினைத்தேன், சிரிப்பு வந்தது” என்று.
எதையும் உடனே செய்யவில்லையென்றால் இப்படித்தான் ஏடாகூடமாக ஏதேனும் நடக்கும்.

No comments:

Post a Comment