Thursday 14 November 2013

ஆங்கோர் குளம்

ஆங்கோர் குளத்தின்
மையத்தில் மலர்ந்த
அழகிய செந்தாமரையின்
ஓரிதழிலென்
உயிர் வைத்து
பின் மீண்டேன்.

காலங்கள் போயின,
தேனுண்ண நானும்
தொலைதூரம் போனேன்.
நற்சூழல் கொண்டு
பொன்மலரும்
நன்முறையில் வளர்ந்தது.

என் பயணம்
எங்கெங்கோ ஆயினும்
என்னுயிரின் இருப்பிடம்
அம்மலரன்றோ?
களைப்புற்ற ஒரு நாளின்
பிற்பொழுதில் உயிர்தேடி
பயணம் மேற்கொண்டேன்.

நெடும் பயணம் ஆனாலும்
தேடியதென் உயிரன்றோ?
கணாதிருக்க இயலுமோ?
கோடியாய் மலர்கள்
குவிந்திருந்தாலும்,
கண்டேனென் மலரை.

மாலைக் கதிரொளியை
மீட்டிடச்செய்து
கவிதையாய் மலர்ந்த
செந்தாமரையைக் கண்டதும்
என்னுயிரே,
உனைவிட்டு
இத்தனை நாள் நான்
எங்கேதான் போனேனோ என
என்னையே நொந்து கொண்டு
மலர்மடியைத் தழுவி
மயங்கிடலானேன்.

இனியொரு பயணம்
எனக்கினி வேண்டாம்.
உன்மடி சாய்ந்து
வாழ்ந்திடல் போதுமென்
உயிரே!

No comments:

Post a Comment