Thursday 14 November 2013

நிலவைத் தேடி

















புயலுடன் கூடிய மழைக்காலத்திலும்
புதையாத எந்தன்
நினைவுகளை போர்த்து
சிலுசிலுக்கும் காற்று
செவிப்பறைகளில் மோத
நிலவின்மேலுள்ள காதலில்
தேடும் விழிகளுடன்
நெடுநேரம் நின்றிருந்தேன்.

மழை நீரிலா?
விழி நீரிலா?
மறைந்ததென் பொன் நிலா!
வெளிச்சப் புள்ளிகளைக் கூட
விட்டுவைக்காமல்
விழுங்கிக் கொண்டு போனதோ
காரிருளும், கடுமழையும்?

பாதங்களில்
ஒழுகி உருகிப் போனது
ஓடையாய் மழை நீர்,
பேயாட்டம் ஆடிய
கிளைகளும், மரங்களுமெனை
போ, போவென
அறைந்துக் கதறின.

வெள்ளம் உயர்ந்து
விழுங்கியே போனாலும்,
விடியலின் கதிரவன்
வேகமாய் வந்தாலும்,
வெண்ணிலா, என்நிலா
வேண்டுமென்ற அடம்
வீறுகொண்டு உள்ளத்தில்
வெள்ளத்தை விட வேகமாயெனை
விழுங்கியபடி இருக்கிறது.

கருந்திரளாயிருக்கும்
கலையாத மேகம்
களவாடி போகட்டுமெனை.
கற்பனைக்கப்பால்
மேக நீச்சலிட்டு
வான்வெளியில் என் நிலவுடன்
மகிழ்ந்தபடி இருப்பேன்!

No comments:

Post a Comment