Monday 25 November 2013

சுழற்ச்சி




ஒற்றை விரல் கொண்டு
உன்னை தூக்கியவன்
எந்த விசை கொண்டு
இவ்வுலகை சுழற்றுகிறான்?
சுற்றி வரும் பூமியிலே
உள்ளவரும் சுழலுகிறார்.

கண் சுழற்றி,
கை சுழற்றி,
கால் சுழற்றிப் போனாலும்,
நா சுழற்றுங்கால்,
பிதற்றல்கள்தாம்
பொங்கி வழிகின்றன.

எல்லாமே சுழன்று,
எல்லாமாய் சுழன்றாலும்,
மனம் சுற்றும் நிலை வேண்டா
மாந்தர்தம் மனமே
முதலில் சுழலுதடா!

வேண்டுதல் வேண்டாமை
வேண்டுவோர் மனங்களில்
வேண்டியபடியே
வேண்டாமை வாழுதடா!

வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரிபடாத வாழ்விலே
விடிவதும், முடிவதும்
சுழற்ச்சியாய் நீளுதடா!


முடிவிலா வாழ்விலே
முடிவுகள் தேடும்
மனங்களின் சுழற்ச்சி
முடிவுறும் காலையில்
அத்தனை சுழற்ச்சியும்
அமைதி யடையுமோ?

No comments:

Post a Comment