Monday 2 September 2013

அடையாளம்


அந்த உணவகத்திற்கு என் நண்பர் அடிக்கடி செல்வதுண்டு. எப்போதும் செல்லும் குளிர்சாதன அறையில் ஒரு சிறுவனென்று சொல்ல முடியாத, இளைஞனாயும் இல்லாத பையன் அவரை சரியாக வரவேற்று, இருக்கையில் இருத்தி உபசரிப்பான்.
அம்முறை போனபோது, கூட்டம் சிறிது அதிகமாக இருக்கவே, என் நண்பருக்கு காத்திருக்க நேரிட்டது. காத்திருக்கும் சமயம் அந்த பையன் அவரை கண்டு விட்டான். ஓடி வந்து அவரை சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறி விட்டு, அவருடைய பெட்டியை வாங்கி கொண்டு போய் வைத்தான்.
சிறிது நேரத்தில் இடம் கிடைத்து, இருக்கையில் அமர்ந்து அந்த பையனை அழைத்து அவன் பெயரை கேட்டபோது, அவன் ஒரு விநாடி திகைத்தான். பின்னர் சொன்னான், சுந்தரேசன் என்று.
கேட்டதும் ஏன் திகைத்தாய் என்று கேட்டதற்கு, அவன் சொன்னான், “என் பெயர் எனக்கே மறந்து விட்டது அய்யா, என் கடை முதலாளி முதல், கூட வேலை செய்யும் எல்லோரும் என்னை, பையா என்றும், டேய் என்றும், குள்ளா என்றும் அழைத்து, என் பெயரை நீங்கள் கேட்டதும் நான் திகைத்துப் போய் விட்டேன், நன்றி அய்யா என் பெயரை எனக்கே ஞாபகப் படுத்தியமைக்கு” என்றான்.
முகவரி தொலைத்து நிற்கும் அவர்களின் அடையாளங்களை தொலைக்காமலிருக்க என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment