Thursday 26 September 2013

புரியாத தேடல்

பள்ளம் பறித்து
மணற்பரப்பின் சூட்டை
உடல் நிறைத்து
மெல்லிய ஓலமிட்டுக் கிடந்ததந்த
தெரு நாய்

செய்தொழில் ஒன்றுமில்லை,
சேவகம் கூட இல்லை,
வேளை தவறாமல்
வரும் சோறு
தெருக் குப்பையில்.

உண்ட உடல் சோர
அங்குமிங்கும் ஓடும்.
பிண்டமது கூட
வரும் துணையை நாடும்.

என்றாவது ஓர் நாள்
எப்படியாவது இறக்கும்.
மூப்பு வந்தோ,
சீக்கு வந்தோ?
வாகனம் இடித்தோ,
வகையறியா வாழ்க்கை.

முகவரியின்றி
வரைமுறையின்றி
வாழ்க்கையொன்றை வாழ்ந்து
வெறுதே போகும்.

இறுதியில்
என் வாழ்க்கைக்குமிங்கே
என்னதான் உண்டு?
பிறந்து,
சிலகாலம் இருந்து,
பின்னர் இறந்து,
இறுதியிலென்ன?

மற்றவர் மனதிலென்
முகவரி பதித்து,
அவரும் இறந்த பின்
கிடைப்பதென்ன?
புரியாத தேடலில்
மீண்டும் நான்...

No comments:

Post a Comment