Monday 2 September 2013

முதல் பயணம்

அதிகாலை நேரம்
நெடுந்தூர பயணம்
இடை நில்லா பேருந்தில்,

இருவர் இருக்கையில்
என்னவள் என்னருகில்,
கருத்த உடையில்
வெளுத்த மல்லிகையாய்,

கற்றை கேசம்
காற்றில் அலைய
கைகொண்டு அடக்கி
காதிலே சொருக
கவிதையாய் காட்சியெனக்கு...

அருகிருந்தும்
தொட பயந்தேன்.
அவளதை புரிந்தபடி
அடிக்கடி எனை பார்த்து
பூவாய் மலர்ந்தாள்.

இமயமலையில்
ஏறத்துடிக்கும்
இளைஞனாய் என் மனம்
உற்சாகத்தின் விளிம்பில்,

காற்றின் துடிப்பிலடங்கா
சேலைத் தலைப்பென்மேல்
உரசும் பொழுதெல்லாம்
உள்ளத்தில்
பனிப் பூவின்
மழைசாரல்...

இருக்கையில் இருந்தவுடன்
உறங்குவதோ,
புத்தகம் படிப்பதோ
பழக்கமுள்ள எனக்கன்று
அவளை படிக்கவே
நேரம் போதவில்லை..

இடை நில்லா பேருந்து
அத்தனை இடங்களிலும் நிறுத்தி
கூவிக் கூவியழைத்து
கூட்டத்தை சேர்த்தனர்.

எங்கிருந்தோ வந்த ஒரு மூதாட்டி
எல்லா இருக்கையையும் விட்டு விட்டு
என்னை எழுப்பி விட்டார்.
என்ன ஒரு ஆனந்தம்
அவளுக்கு...?

சேலை தலைப்பால்
சிரிப்பை மூடி
மின்னும் விழிகளால்
என்னை நோக்க
என்னுள்
தேனருவி கொட்டியது.

கொஞ்ச நேரத்தில்
கொடுமையுணர்ந்தேன்,
எனக்கு மட்டுமல்ல
அவளுக்கும்தானென்று,

எனை எழுப்பிய மூதாட்டி
அவள் காதுகளை
அறுத்துக் கொண்டிருந்தாள்.
பாவம் என் செல்லம்...!

பின்னர் வாழ்க்கையில்
எத்தனை பயணம் என்றாலும்,
முதல் பயண அனுபவம்
மறக்க இயலா ஒன்று...!

No comments:

Post a Comment