Thursday 4 September 2014

கைப்பை






















அவசரமாய் அலுவலுக்கு கிளம்பையிலும்
அவசியமெனத் தோன்றியதெல்லாமெடுத்தென்
அகம் நிறைத்து
வயிறு புடைத்து நின்றதற்கோர் அடி கொடுத்து
தோளில் தொங்கவிட்டு நடந்தாள்

இடதுதோளில் இறுமாப்புடன் இருந்தவனை
வசதிக்காய் சில நேரம் வலது தோளிலிட்டு
எதிர்வருவோர் கண்படும்படி
எடுத்துச் சென்றாள்

வாகனத்தில் செல்லும்போதும்
தோள்விட்டு நீங்காமல்
தொங்கியே கிடந்தேன்

அலுவலின் இடையிலும்
அழகாயிருக்கே ஏதடி எனக் கேட்டவர்க்கு
புதிதெனச் சொல்லி புன்னகை பூத்து
விலையும் சொல்லி விகசித்தாள்

என்னுள் அவளின் தேவைக்கென
என்னதான் இல்லை?
அவளே என்னுள்
அடங்கியிருப்பதாயொரு எண்ணமெனக்கு

யாரெது கேட்டாலும்
எடுத்துக் கொடுப்பாள்
யாருமெனைத் தொட அனுமதியாள்
பாசமென்றுதான் நானும் நினைத்திருந்தேன்

அடுத்திருந்த அகல்யாவின்
அழகிய கைப்பையை அவள் காணும்வரை..!

No comments:

Post a Comment