Thursday 4 September 2014

கொல்(ள்)கிறாய்























அன்பு மழையை பொழியத் தெரிந்த உனக்கு
ஆதங்க நெருப்பையும் அள்ளிவீசத் தெரியுமென
அனர்த்தம் நிறைந்த மழை நாளில்
சொல்லிச் செல்கிறாய்

குளிரின் நடுக்கத்தில்
தணலைத் தேடினேனென்பதற்காக
மடியில் தணலை பரப்பிவைத்து
காத்திருக்கிறாய்

விடியாத இரவுகளை
உனக்கென எடுத்துக்கொண்டு
முடியாத பகல்களை எனக்குக் கொடுத்து
கனவுகளை முடக்க முயல்கிறாய்

கற்பனைகளும், கனவுகளும், கவிதைகளுமே
எனது பசியாற்றுமென அறிந்தும்
நித்திரையற்ற நடை பயணத்திற்கென்னை
தயார் செய்கிறாய்

இத்தனையும் நிகழ்த்திவிட்டு
அருகில் வந்து உச்சுக் கொட்டி
ஆலிங்கனம் செய்து
அன்பின் மொழியுதிர்க்குமுன்
மறைந்து கொல்(ள்)கிறாய்

No comments:

Post a Comment