Thursday, 11 September 2014

வளைக்கரம் பற்றுவேன்


வானுறை மதி யென் கையறு நிலைகண் டெழுதியதோர் கவி
வாசலிலே யவள் காலடியோசை தேடியே ஏங்குதென் மதி
நானொரு பாதி நீயொரு பாதி சொன்னவள் போனதோ விதி
நாதமு மிழந்து கீதமும் தொலைந்து நான் நடப்பது யார் சதி

செவிப்பறை அதிரும் இரைச்சலென் மனதில் எழும்புவதேனோ ரதி
செந்தமிழ் மாலை சூடிட வேண்டி எழுதிய வரிகள் பா ரடி
தவிப்பினில் என்னுள் தன்னிலை இழந்த சூழலும் தோன்று தடி
தேவியே யுந்தன் மடியினில் துயின்ற நாட்களை தேடும் பதி

ஆலிலை கண்ணன் பவளச் செவ்வாயுடன் நம்மிலே உதிப்பா னடி
ஆனந்த கீதம் பாடிடும் காலம் விரைவினில் வருகு மடி
பேரலை சூழ்ந்த தீவினைப் போல் நம் வாழ்வின் நிமிட மடி
பேரிடர் களைந்துன் வளைக் கரம் பற்றுவேன் கவி நயம் கூடிய ப்ரிய சகி!

No comments:

Post a Comment