Thursday 4 September 2014

பிரச்சினைகள்


அந்த அறையில் குழுமியிருந்தவர்களைப் பார்த்து அந்த ஆலோசகர்  “உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் பலப்பல இருக்கும். ஒவ்வொருவரும் அதன் தாக்கத்தினால் எப்படி அதை சமாளிப்பது என்று கவலையில் மூழ்கி இருப்பீர்கள். நான் அதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிரச்சினைகளை உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள காகிதத்தில் எழுதி இங்கு உள்ள பெரிய பெட்டியில் போட்டுவிடுங்கள்” என்று சொன்னார்.
அனைவரும் அதைக் கேட்டு அவசர அவசரமாக தங்களிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் தங்களது பிரச்சினைகளை எழுதி அந்த பெட்டியில் போட்டனர். அந்த ஆலோசகர் பெட்டியை நன்றாக குலுக்கி, “இப்போது ஒவ்வொருவரும் வந்து இந்த பெட்டியில் உள்ள காகிதங்களில் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அனைவரும் சிறிது தயங்கினாலும் சென்று ஆளுக்கொரு காகிதத்தை எடுத்தனர். ஆலோசகர், “இப்போது உங்கள் பிரச்சினைகள் வேறு ஒருவரிடம் போய் இருக்கும். வேறு ஒருத்தரின் பிரச்சினை உங்களிடம் வந்து இருக்கும். உங்கள் பிரச்சினையை அவர் தீர்த்து வைப்பார். நீங்கள் மற்றொருவரின் பிரச்சினையை வாசியுங்கள். அதை தீர்த்து வைக்க முயலுங்கள்” என்றார்

தங்கள் கைகளில் உள்ள காகிதத்தை வாசித்த ஒவ்வொருவரின் விழிகளும் பிதுங்கின. ஆலோசகர் தொடர்ந்து, “உணருங்கள். உங்கள் பிரச்சினையை உங்களால் மட்டும்தான் தீர்க்க முடியும். அதற்கான சூழலும் உங்களிடம் மட்டும்தான் உண்டு. உங்கள் கைகளில் உள்ள மற்றவரின் பிரச்சினை உங்கள் பிரச்சினையைவிட உங்களுக்கு சிக்கலானது. ஆகவே, அவரவர் பிரச்சினைதான் பெரிது என்று எண்ணாமல், என்னுடைய பிரச்சினை எளிது, என்னால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று உணர்ந்து செயல்படுங்கள்” என்றார்

No comments:

Post a Comment