Friday 19 September 2014

பயிற்சியாளர்


                சுப்ரமணியன் அந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 85 கிலோ பிரிவில் பளு தூக்கும் போட்டியில் இறுதிச் சுற்றில் இருந்தார். ஒரு சைனா போட்டியாளருக்கும், சுப்ரமணியனுக்குமிடையே கடும்போட்டி நிலவியது. யார் வெற்றி பெறப் போகிறார்களென உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.
பயிற்சியாளர் விஜயன் சுப்ரமணியனை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தார். சைனா வீரர் 165 கிலோ தூக்கி விட்டார். சுப்ரமணியன் இருமுறை 165 கிலோவை தூக்க முயற்சித்து தோற்றார். கடைசி முயற்சி. சுப்ரமணியன் மனம் கலங்கி இருந்தது. தன்னால் முடியாமல் போகுமோ என மனம் தடுமாற தொடங்கி இருந்தது.

               சைனா வீரர் 170 கிலோ முயற்சித்து தோற்றார். சுப்ரமணியனிடம் அவரது பயிற்சியாளர், உத்வேகமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தார். இது உச்சத்தை நோக்கி உனது இறுதிப் பயணம், இம்முயற்சி உன் எஞ்சியுள்ள வாழ் நாட்களைத் தீர்மானிக்குமென சொல்லிக் கொண்டிருந்தார்.

               சுப்ரமணியன் கண்முன் அவரது தந்தையும், தாயும் தோன்றினர். அவர்கள் அன்பு தோன்றியது. நாட்டு மக்கள் வைத்திருந்த அன்பும், நம்பிகையும் தோன்றியது. பயிற்சியாளர் விஜயனை நோக்கினார். கடந்த 3 வருடங்களாக அவரது பயிற்சியாளர் விஜயனின் உழைப்புத் தோன்றியது. ஆவேசமாக எழுந்தார். சுப்ரமணியனது ஆவேச எழுச்சியைக் கண்டார் பயிற்சியாளர். முன்பு ஓடிச்சென்று அவரது தூக்க வேண்டிய எடையை சரி பார்த்தார். சுப்ரமனியனை தட்டிக் கொடுத்து வென்று வா எனக் கூறினார்.

               சுப்ரமணியன் களத்தில் இறங்கினார். கண்மூடி உள்ளத்திலுள்ள அவரது அன்புப் பெற்றோரை ஒரு கணம் தியானித்தார். ஆவேசமாக எடையை ஓரே முயற்சியில், ஆஹா, அற்புதம், அபாரம், தூக்கி விட்டாஆஆஆஆஆஆர். எடையை கீழே பொட்டுவிட்டு திரும்பி எடை அளவைக் காட்டும் கருவியை பார்த்தார், என்ன ஆச்சரியம்? அங்கே 170 கிலோ என மின்னிக் கொண்டிருந்தது.

ஆம், சுப்ரமணியன் 165 கிலோவைத் தூக்க சிரமப் பட்டார். எப்போது அது 170 கிலோவாக மாறியது? பயிற்சியாளர் சுப்ரமணியனது ஆவேசத்தைப் பார்த்து எடையை 170 கிலோவுக்கு மாற்றி விட்டார். 

                பயிற்சியாளருக்குத் தெரியுமல்லவா? தனது மாணாக்கன் எப்போது உத்வேகம் பெறுவானென்று! உலகில் முதலிடம் பெறுவானென்று!

No comments:

Post a Comment