Friday 9 October 2015

குறிப்பேட்டில் பெயர்


















அந்த மேசை மேலிருந்த
வட்டக் கண்ணாடியின் மேல்
பரப்பப்பட்டிருந்த குறிப்பேட்டுக் காகிதத்தில்
நூற்றுக்கு சற்றே குறைந்த எண்ணிக்கையில்
பெயர்கள் வரிசை படுத்தப் பட்டிருந்தன

அதிகாலை பணிக்கு வந்த அலுப்புத் தீர
இருகை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு
எதிரில் வைக்கப்பட்ட தேநீரை உறிஞ்சியபடி
பெயர்பட்டியலை வாசிக்கலானான்

ஒவ்வொரு பெயருக்கும்
உள்ளத்தில் உயிரோவியமொன்று
எழுந்து கொண்டிருந்ததன் உவகை
முகத்தில் பிரதிபலித்தது

ஓரிரண்டு பெயர்களால்
நினைவுகள் தூண்டப்பட்டு
வருத்தங்கள் சில நொடியும்
மகிழ்ச்சி சில நொடியுமாக
மாறி மாறி மறைந்தன

சில பெயர்கள்
சிற்சில நிகழ்வுகளுடன்
இணைக்கப்பட்டிருந்ததால்
வேகமாக அவற்றை கடப்பது
எளிதாயிருந்தது

அவளின் பெயரை வாசித்தபோது மட்டும்
அகலிகையாய் உயிர்த்தெழுந்த
ஆனந்தக் கனவுலகம்
விழிகளுக்குள் விரிவடைந்தது

அடுத்தபெயருக்கு செல்ல
ஆவல் பிறக்காதிருக்க
வலுக்கட்டாயத்தினால்
கீழிறக்கிய பார்வையில்
விழுந்த அப்பெயரின்
வாசனை நாசியை தொடவில்லை

நெடு நேரம் உற்றுப்பார்த்தும்
நினைவுகளின் சண்டித்தனம்
அடிவாங்கும் அடிமாடாய்
அடங்கிக்கிடந்தது

எழுதப்படாத பக்கங்களாய்
வாசிக்கப்படாத புத்தகமாய்
முனைப்பில்லா பெருவெளியாய்
அழுந்தத் துடைக்கப்பட்ட மனப்பலகையாய்
நிர்மலமாக அது இருந்தது

குறிப்பேட்டை மூடி
கண்ணிமைகளையும் அடைத்தபடி
ஆழ்மனதில் அப்பெயரை குறித்த உணர்வுகளை
விசாரிக்கச் சொன்னான்

வெகு நேரம் கழித்து
விடையொன்று வந்தது
அப்பெயர் அவனுக்கே உரித்தானதென்று..

No comments:

Post a Comment