Sunday 11 October 2015

யாசகம் கேட்டாள்(ர்)


இடுப்பில் இழுத்து செருகிய சேலை,
மிகுந்த ஆகிருதி,
மிடுக்கான நடையுடன்
பெண்மையின் கலப்படம்,
தலை வாரி
பின்னலிட்டு,

வளயத்தின்மேல் கொண்டையிட்டு,
பூச்சூடி, பொட்டு வைத்து,
பெண்மையை முன்னிருத்தி,
அடுத்திருந்த வாகனத்தின் ஓட்டுநரை,
அதட்டி(?) யாசகம் கேட்டாள்(ர்)

திருநங்கை குறித்து
படித்தவை மனதில் மின்ன,
அவரையே பார்த்திருந்தேன்
சட்டென திரும்பி
எனைக் கண்டு வேகமாய்
என்னிடம் வந்து,
தலை சாய்த்து,
உதடு சுழித்து
பெண்மை கலந்த
சிரிப்புதிர்த்து,
கை நீட்டினாள்(ர்).

பணமெடுக்க போனவனின் ஓட்டுநர்
 “என்ன சார்,
அதெல்லாம் வேணாம்,
கொடுக்கப் போனா
உங்க கைய பிடிச்சுக்கும்என
வேகமாய் வாகனத்தை
நகர்த்தி விட்டார்.

அந்நங்கை முகத்தில்
கோபம் துள்ள,
ஏக வசனத்தில்
என்னன்னமோ அள்ளி வீச,
என் முகத்தில்
எவ்வித மாற்றமுமின்றி

கண்ணாடியிறக்கி
கையசைக்க
ஓடி வந்து
நோட்டை பற்றிக் கொண்டு
என் கரத்திலொரு முத்தம்
பதித்துப் போனார்.

வெற்றிலை குதப்பிய
முத்தத்தின் வாசனை
இன்னும் என் கைதனில்...!

No comments:

Post a Comment