Saturday 17 October 2015

நானுன்னை ஏற்கிறேன்

ஆனந்தம் நின்னகமெங்கும்
நிரந்தரமாய் 
நிறைந்திருக்கவேண்டுமென
நான் வேண்டியிருக்க

ஒற்றைச் சொல் கேட்டு
உருண்ட விழிநீர் மறைத்து
புறமிருந்து வந்தவனுக்கு
பொய்ப்புன்னகை ஈந்து நின்றாள்

இதய ஓசைகளின்
லயமறிந்தவனுக்கு
அவள் இயல்பிலில்லையெனத்
தெரியாமல் போகுமோ

கரம் பற்றி
இறுகணைத்து
நுதலிலென்னிதழ் பதித்து
என்னவாயிற்று என்றேன்

ஒன்றுமில்லையென
ஒளித்திருக்க முயல
மடியணைத்து
தலைகோதி
மீண்டும் என்னவென
யாசித்தேன்

மறுமொழியில்லையெனினும்
விழி திரண்டு
விடை சொன்னது

குறையற்ற மனிதனிக்
குவலயத்திலில்லை
குற்றம் சொல்லும் நபர்கள் தம்மை
திரும்பிப் பார்ப்பதில்லை

நீயென்னை
நிறைகுறையாய் ஏற்பதுபோல்
நானுன்னை
அப்படியே ஏற்கிறேன்

எத்துணை பேர்
குறை சொல்லித் திரிந்தாலும்
மற்றவரைப் பற்றிக்
கவலையெதற்கு

உன் அகிலமென நானிருக்க
ஆரணங்கே கலங்காதே
அன்பை மட்டுமே பொழிவேன்
ஆருயிரே வா என்றேன்

உடல் சாய்ந்து
உயிரொட்டிக்கொண்டாள்

No comments:

Post a Comment