Friday 10 October 2014

பூதாகரமாய் எண்ணுவதேன்?

அந்த நொடியை
அவள் ரசிக்கவில்லையென
அப்பட்டமாகத் தெரிந்தது

வீட்டினுள் நுழைந்த கூட்டத்தில்
தொலைந்தது நானா,
அவள்மேல் நான் கொண்ட அன்பாவென
ஆவேசமாகக் கேட்கத் துடித்தாள்

உற்சாக விளிம்பில் நின்ற எனக்கு
ஒரு நொடிகூட
அவள் நினைவு விலகவில்லையென
எப்படி நிரூபிப்பது?

விழி இறக்கைகள்
பறந்து பறந்து அவளைத் தேடின
அவளோ கதவோரத்தில் மறைந்த
ஊர்வனபோல் ஒடுங்கியிருந்தாள்

தேடிக் களைத்து
வாடியிருக்கையில்
சட்டென்று மின்னலாய்
விழிகளை முட்டினாள்

கெஞ்சுமென் பார்வையை அலட்சியம் செய்து
வேறெங்கோ பார்ப்பதாய்
வேடிக்கை காட்டினாள்

மீண்டும் நாடிச் சென்ற விழிவீச்சை
தன் விழிவாள் கொண்டு வெட்டினாள்

அத்தனை உறவுகளையும் உதறிவிட்டு
அன்னவளை ஒட்டியபோது
தானப்போது தென்றலல்ல புயலென்று
தகராறு செய்தாள்

எத்தனையோ என் தவறுகளை
எளிதாய் மறந்தவள்
இச்சிறு நொடிப் பிழையை
பூதாகரமாய் எண்ணுவதேன்?

அவள்மீதுள்ள அன்பில்
எள் முனையளவு கூட குறைய
மனம் ஒப்பவில்லையோ?

No comments:

Post a Comment