Monday 6 October 2014

தீஜ்வாலை


























அந்நொடியைக் கடந்த பின்னரே
வலியின் அழுத்தத்தை உணர முடிந்தது
பாதச் சுவடுகளின் பதிவுகளில்
முட்கள் புதிதாய் முளைத்திருந்தன
துணையற்ற நெடும்பயணத்தின்
விசாலத் தெருக்களில்
விலாசமின்றியொரு தேடலின் சங்கீதம்
லயம் தப்பியதாகத் தோன்றியது

பார்வைக்கு அழகாய் பட்டைகள் வரையப்பட்டிருந்தும்
தனிமை நெருப்பின் சூட்டில்
அவை கனன்று கொண்டிருந்தன
அழுந்தப் பற்றியெழுதிய எழுத்தாணியின் ரணங்களோ
உள்ளங்கையில் உறுத்திக்கொண்டே இருந்தன

மஞ்சள் பூசி மயிலிறகால் வருடிய பார்வையும்
குளிர்மேகத் தீண்டலாய்
தொட்டுவிட்டுப் போன கூந்தலிழைகளும்
மீண்டும் வேண்டுமென
அச்சூட்டினை வேள்வித் தீயாக எண்ணி
அடுத்த அடியை வைக்கத் தொடங்கியிருந்தது

இருள் கவ்வும்பொழுதிற்குள்
எவ்வாறேனும் இலக்கையடைய வேண்டுமெனும் உந்துதலில்
மரத்துப் போன கால்களுக்கு புது ரத்தம் பாய்ச்ச
அனல் காற்றை அகண்ட வாய் திறந்து
உட்கொள்ளத் தொடங்கியிருந்தது

அகமும் புறமும் பற்றியெரிந்த தீக்கங்குகளால்
தானே தீஜ்வாலையாய் மாறி
பேரொளியை வீசிக் கொண்டிருந்தது

No comments:

Post a Comment