Wednesday 22 October 2014

திக்கு முக்காடிப்போனேன்

















எழுதுகோல் பிடித்து
எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தவன்மேல்
எண்ணற்ற கோபம் பொங்கியிருந்தது அவளிடம்

உணவுண்ண அழைக்கையில்
உஷ்ணங்கள் தெறிக்கும்
பாத்திரங்கள் பல நேரம்
பரிதவித்து உருளும்
யாரேனுமெனை அழைத்தால்
எரிமலையங்கு வெடிக்கும்

என் கவிதைகளை காதலித்த அவளுக்கு
வர்ணித்தவிதம் பிடிக்கவில்லையென
தொடக்கத்தில் நினைத்தேன்
பின்னர்
கவிதைக்கருவாய் அவளில்லையென
சினந்ததாய் அனுமானித்தேன்

தன் நிலாத்தோழியிடம்
சொல்லியனுப்பினாள்
கோப விளைச்சலின் விதைகள்
புரிந்துணர்வின்மையில் வேரூன்றியதாக

கவிதைகளை விடுத்து
கவனத்தை அவளிடம் செலுத்த
கட்டவிழ்ந்தன பலவுண்மைகள்

அன்பு செலுத்துவதிலும்
அக்கறை காட்டுவதிலும்
என்னையும் என் தேவைகளையும்
பாசங்களையும் நேசங்களையும் புரிந்திருப்பதிலும்
அவளுக்கு நிகரவளேயென அறிவேன்

பின்னொரு தினம்
சொன்னேனவளிடம்
விதைகளின் வேர்களை கண்டறிந்தேனடி
அன்பு நீரூற்றி வளர்க்கபட்ட அவை

உனக்கென நேரத்தை நான்
ஒதுக்காமையிலும்
போய் வரவா என்று சொல்லும்
பொழுதுகளிலும் தான்
நிலம் கண்டு நீண்டு வளர்ந்ததென..

அன்றலர்ந்த தாமரையாய் அகமலர்ந்தவள்
அருகில் வந்து இறுக்கிக் கொண்டு
முத்தங்களை வாரியிறைக்கும் வள்ளலானாள்
திக்கு முக்காடிப்போனேன் நான்.

No comments:

Post a Comment