Friday 9 October 2015

உனைத் தேடி



தெளிவற்ற வானம் தந்த
நிழல் பாதையில்
பூத்துவாலையாய்
நீர் திவலைகள் மேல் தெளிக்க
பாதச்சுவடுகள்
பதியாமல் நடந்தபடி நான்

வேட்கையற்ற பொழுதுகளில்
என்னுள்ளம்
விரவி கிடக்க
ஓசையற்ற சங்கீதம்
செவிகளில் மட்டும்

இதழ் தொட்ட
துளி மழை நீரில்
உன் விரல் தொட்ட
மருதாணி வாசம்
எப்படி வந்தது

நிலம் பதிந்த
நீர் திட்டுகளில்
விளக்கொளியின்
வர்ண ஜாலங்களிலும்
உன் புன்னகையே
பூத்து கிடக்கிறது.

கனவு தேசத்து பாதையிலே
கரம் பிடித்த வேளைகள்
மீண்டும் மீண்டுமென் நினைவில்
சுவை கூட்டப்பட்ட
செந்தேனாய்
சிதறி ஓடுகிறது.

மழை நீரில் நனைந்தாலும்
உள்ளுக்குள் தாகம்
ஊற்றாகப் பெருகி
உமிழ் நீரையும்
வற்றிப்போக செய்ய

துவளும் பாதங்களை
திருத்தி நேர் வைத்து
உனைத் தேடி
உனைத் தேடி,
இனியும்......

1 comment:

  1. கனவுக்குள் ஒரு தேடும் பயணம் கரம் கோர்த்த அன்புத் துணையுடன் மனதில் நேசமென்னும் வாசத்துடன்.

    ReplyDelete