Thursday 25 June 2015

முட்செடி

























அக்குறுகலான பாதையில்
வளர்ந்திருந்த முட்செடிமேல்
உதிர்ந்த மலரிதழ்களின்
காய்ந்த வாசனை பரவியிருந்தது

சுகந்தமென்பதறியாது
கருத்தும் பழுத்தும்
கூர்கொம்புகள் நிறைந்தும்
விஷம் தோய்ந்திருப்பதாயும் சொல்லப்பட்ட முட்செடி

கார்முகிலோ வெண்பஞ்சுத் தூவலோ
வண்ணத் தோரண மின்னலோ
தனக்கொரு புன்னகையைத் தர
வாய்பில்லையென்றே நினைத்திருந்தது

ஊர்ந்திழையும் அரவமோ
பாய்ந்தோடும் முயல்களோ
மதயானைக் கூட்டமோ
ஆர்ப்பரிக்கும் அரிமாவோ
தன்மேல் பாதம் வைத்தால்
பின்னர்
தரைமேல் வைப்பதரிதெனவே
தனித்துவம் பெற்றிருந்தது

மலர்வாசம் சூழ்ந்த
இளந்தென்றல் காற்றில்
மகிழ்ந்தாடி வரும்
வண்ணத்துப் பூச்சிகள் மட்டும்
மேலமர்ந்து தவழ்ந்து
மலர்ந்து செல்வது
தன்னையுமவை
மலர்கூட்டதிலொன்றென
நினைப்பதனால் இருக்கலாமெனவும்
உணர்ந்தேயிருந்தது

கட்டாரி கொண்டு
வெட்டிக்களைகையிலும்
கண்ணீர் துளிர்க்கும் விதமறியா
கல்நெஞ்சுக்காரனென
சுற்றியிருந்த சகச் செடிகள்
சொல்வதைக் கேட்டும்
கலக்கமோ முறுவலோயின்று
மரணிக்கும்விதம் அறிந்தேயிருந்தது

எனக்குமது
பாடம் கற்பிக்குமோவென

காத்திருக்கத் தொடங்கியிருந்தேன்...!

No comments:

Post a Comment