Saturday 20 June 2015

நிகழ்வின் சுகம்














உறக்கமில்லா இரவின்
தடித்த விழியிமைகளை
குளிர் நீரிட்டுக் கழுவி

அதிகாலையே தோட்டத்திற்குள்
அவசரமாய் சென்று
புதிதாய் பூக்கத் தொடங்கிய
பல்வகை மலர்களிலொன்றோடு

தனிமைச் சுவடுகள்
பாரமெனக் கொண்டயென்
தவிப்பின் கனவுகளுக்கு
விளக்கம் கோர

பின்னிருந்த மாமரங்களில்
குடியிருந்த குயில்களிரண்டு
குக்கூவென சொன்ன பதிலின்
விளக்கம் புரியாமல் விழித்து

நள்ளிரவின் மென் தூரலில்
வீழ்ந்திருந்த மழைத்துளிகள்
பனிப்பூவாய் விகசித்து
செய்த கண்சிமிட்டல் பதிலின்
அர்த்தம் புரியாமல்
அலுத்து நின்றபடி

குளிர் மேகக் கொஞ்சல் கழிந்து
இலை வருடி மலர் மேனி தழுவி
இன்பத் தேனெங்கும் பருகி
எனை நாடி
மனமாற்றம் கொள்ளெனச் சொன்ன
வாடைக்காற்றின் மீதும் சலிப்புற்றவாறு

அகம் செல்ல பாதமெடுத்த
என் கால் பற்றிய கொடியொன்று சொன்னது

தனிமை தவிப்புகள் தற்காலிகமே
இனிமை பிறப்புகள் எக்காலமுமே
பழந்தமிழ் மீது காதல் கொண்டவனின்
வாழும் வரிகளில் நேசங்கள் காண்பாய்

விழி திறந்து
வெளிச்சம் கண்டு
வாழ்வில் விருப்பம் கொள்
கனவுகளில் இனி
கவிதை மாத்திரம் காண்பாய்
கற்பனையை விட
நிகழ்வில் சுகம் காண்பாய்…!

No comments:

Post a Comment