Friday 15 August 2014

அடைபட்ட கோழிக்குஞ்சுகள்


















அந்தக் கூட்டத்தின் மத்தியில்தான்
அகப்பட்டிருந்தேன்
அடையாளங்காண வண்ணம் பூசியிருந்தார்கள்
எட்டிலக்க எண்ணொன்றை
மனனம் செய்யச் சொல்லியிருந்தார்கள்

உணவைப் பெறவேண்டி
ஒழுங்கில் வரப் பழக்கியிருந்தும்
முண்டியடித்து முன்னேறவே
முயற்சித்திருந்தோம்

பற்பசை தின்றதாக ஒருவன்
பலப்பம் திருடியதாக ஒருவன்
அடுத்தவளைக் கடித்ததாக ஒருத்தியென
சிலரை மட்டும்
தனிக்கோடிட்டு பிரித்திருந்தார்கள்

அடைபட்டக் கூண்டிற்குள்
எத்தனை நேரம்தான் இருப்பதென அறியாமல்
புறம் சென்று விளையாட வழியும் இல்லாமல்
இடித்துத் தள்ளி
கிசுகிசுத்திருந்தோம்

தப்பிப் போன குஞ்சொன்றை
பொல்லாத பருந்தொன்று
சிதைத்து இறையாக்கியதாகவும் கேள்வி.

புரியாத பருவத்தில்
அறியாத செயல்களைச் செய்யாமல்
அடைபட்டுக் கிடப்பதே மேலென எண்ணி
கோழியும் சேவலும் கூறிச் சென்றதால்
இதுதான் எமது உலகமென எண்ணிக் கொண்டிருக்கிறோம்

No comments:

Post a Comment