Friday 15 August 2014

கோபம் களை





வெந்தணலில் மூச்சிழைத்து
வேர்களிலும் கனலிட்டு
காந்தம் உறை கண்களிலே
கடுங்கோபப் பதியமிட்டு
சாந்தமிலாச் சொற்சரங்கள்
சல்லடையாய் துளைகொள்ள
ஏந்திழையாள் என்னெதிரே
எரிமலையாய் நின்றிருக்க

அன்புமழை ஊற்றெடுத்து
அகம் நிறைந்த மங்கையிடம்
இன்பமுள வாசகங்கள்
எடுத்தியம்பித் தளர்ந்த பின்னும்
தென்பொதிகைக் காற்றினிலே
தீப்பந்தம் சுமந்தவளின்
மென்மனதின் கோபங் களை
முறைவேண்டி தவித்திருந்தேன்

பிழையேதும் செய்திலேன் ஞான்
பேரன்பின் விதையே நான்
மழைவேண்டும் மயிலாக-உன்
முகங்கண்டு மகிழ்ந்திருக்க
அலைபோல வேலை பல
அடுத்தடுத்து வந்தவுடன்
சிலைபோல நின்று சில
செயல்கோர்வை சிதறவிட்டேன்

கனியே யென் முகங்கண்டு
கண நேரம் கோபம் களை
உனையே யென் உயிராக
உடுத்தே னதை நினைவில் விதை
அணியே உன் சினங்குறைத்து
அன்பென்னும் ஆற்றில் நனை
எனையே யுன் சேயென்று
என்னாளும் நெஞ்சில் நினை.

No comments:

Post a Comment