Friday 22 August 2014

ஸ்படிகம்

















எங்கும் வியாபித்திருந்த மனக் கடலின் 
ஆழ்நிசப்தத்தில் அமிழ்ந்திருந்த கல்லொன்று
வெளிச்சபூமியின் நிகழ்வியாதிகளை ருசிக்க
மேல் நோக்கிய நீண்டதொரு பயணத்தைத் தொடங்கியிருந்தது.

ஆழ்ந்திருந்த வேளைகளில் 
அதன் தூய்மை எப்போதும்
உப்பு நீரால் துலக்கப்பட்டிருந்ததால்
எவ்வொளியையும் பிரதிபலிக்கும்
அகத்தூய்மை புறங்காட்டும்
ஸ்படிகமாய் மாறியிருந்தது.

அமிழ்ந்து அமைதி கொள்ள
அறிவுறுத்தல்களின் மத்தியிலான
மேல் நோக்கு பயணம் அத்தனை எளிதாயில்லையெனவும்
வேகமிருப்பினும் விவேகமில்லாததெனவும்
விவாதங்கள் நிகழ்ந்தன.

நீரலைகளின் ஓவென்னும் இரைச்சலையும்
நீக்கமற நிறைந்திருந்த நோய் வளர்க்கும் கிருமிகளையும் கடந்து
புறம் வந்து விழுந்த ஸ்படிகத்தின் ஒளிகண்டு
புறஞ்சொல்லிக் களிக்கும் புழுத்த அழுக்குகளும்
பொறாமைக் கனலில் புடம்போடப்பட்ட இன்னபிற வஸ்துக்களும்
அவசர மாநாடு கூட்டி
சிதிலமடைந்திருந்த இயற்கையை அழைத்து
விரைவாய் பணிமுடிக்க ஆணையிட்டன

ஏகாந்தப் பெருவெளியில்
தனதழகைக் காண்பிக்கவியலாத ஒவ்வாத சூழலில்
தனித்தன்மையை
சிறுகச் சிறுகப் பறிகொடுக்கத் தொடங்கியிருந்தது
சுகங்களென கைப்பற்றி
சுவைக்கத் தொடங்கியவை
சங்கடம் தரும் சக்கைகளென
உணரத் தொடங்கியிருந்தது.

அக அழகைக் கண்டு உணர்ந்து
தன்னை எடுத்து பாதுகாக்க வரும்
அந்த தேவ கரங்களின் வருகைக்காய்
தவமிருக்கவும் தொடங்கியிருந்தது.

No comments:

Post a Comment