Friday 14 August 2015

வாழிய சுதந்திரம்


சுதந்திரத் திருநாள்

பள்ளிப் பருவத்தில் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்ததில் தொடங்கிய சுதந்திர தின, குடியரசு தின நினைவுகள்,  பள்ளிப் படிப்பில் மேல்வகுப்புகளில் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு வருடமும், அதற்கான கொண்டாட்ட நடனத்தில் ஒரு வருடமும் கலந்து கொண்டதில் முகிழ்க்கின்றது.

ஒவ்வொரு சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டத்தின்போதும் அப்பா என் சடடையில் குத்திவிடும் தேசியக் கொடியை எத்தனை பெருமிதம் கொண்டு பார்ப்பேன் என நினைக்கும்போது முகமெல்லாம் புன்னகை மலர்வதை மறுக்கவியலாது. அந்தக் கொடியை குத்தியவுடன் உள்ளம் உற்சாகமாகி நான் தான் கொடி காத்த குமரன் என்ற எண்ணத்துடன் என் தேசியக் கொடியை யாரேனும் தரம் தாழ்த்த நான் விடுவேனோவென துடித்த கணங்கள் எண்ணங்களில் ஊஞ்சலாடுகின்றன.

ஆயினும், சுதந்திரத்தின் பெருமையையும் அதை பெறுவதற்கு நம் முன்னோர்கள் பட்ட வேதனையையும் எனக்குக் கற்பித்தது ஒரு சினிமாதான். “கப்பலோட்டிய தமிழன்” என்னும் அந்த சினிமா நடிகர் திலகம் சிவாஜி ஐயாவால் நடிக்கப் பெற்றது. எனது குரு மாமாவின் தூண்டுதலில் ஒரு நாள் அத்திரைப்படத்தை நான் வீட்டில் கண்டேன். செக்கிழுத்த செம்மலையும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வரும் சுப்பிரமணிய சிவாவையும் பார்த்துவிட்டு எத்தனை நாட்கள் மனபாரத்துடன் அலைந்தேனென நினைவில்லை.

அன்று முதல் சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட வேதனை உள்ளத்தில் நீங்காமல் நிலைகொண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோருடன் கொடி காத்த குமரனும் என் நெஞ்சத்தில் உண்மையான தலைவர்களாக இன்றும் நிலைத்திருக்கின்றனர்.

மாமாவின் தூண்டுதலில் நான் சிறு வயதில் படித்த சத்திய சோதனை புத்தகம் (முழுமையாக படித்ததாக நினைவில்லை) ஏற்படுத்திய பாதிப்பும் இன்றும் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு “சிறைச்சாலை” (காலாபாணி) திரைப்படம் கண்டபோது கடைசி காட்சியாக மகாகவியின் 

“தண்ணீர் விட்டா வளர்த்தோம்- இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்”

என்ற வரிகளை படிக்கும்போது நிற்க மாட்டாமல் கண்ணீர் ஒழுகியதை அம்மா அப்பா பார்த்துவிட்டு என் கையை அழுத்திப் பிடித்தது இன்னும் என்னால் உணரமுடிகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போனபோது செல்லுலார் சிறைச்சாலையை நேரில் போய் கண்டு அதன் அமைப்பும் அங்கு சிறைபட்டிருந்தோரின் கடுந் தியாகங்களும் இன்று எவ்வளவு குழந்தைகளுக்கு உணர வாய்ப்பிருக்கின்றது என்ற ஏக்கம் விளைந்தது.
நாம் நமது குழந்தைகளுக்கு சுதந்திரத்தின் பெருமையையும், அதற்கான நமது தியாகத்தையும், அப்படிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய நேர்மையையும் கற்றுக்கொடுக்கின்றோமா ? என எனக்கு ஆதங்கமாக இருக்கின்றது.

மாறாக நம் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது எந்த இடையூறும் இல்லாமல் சமூக வலை தளங்களை உபயோகப் படுத்துவதும், எந்த தலைவரையும் எவ்வளவு கீழ்த்தரமாக இகழ கிடைக்கும் வாய்ப்புமே சுதந்திரமென பொருள்படுகின்றது.

எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் குடியரசு தலைவரை, அந்த நாட்டின் கொடியை, அந்த நாட்டின் தேசிய கீதத்தை அவமதிக்க முடியுமா? அதையும் சகித்துக் கொண்டு இருக்கின்ற இந்த மாபெரும் தேசத்தை நாம் மாசுபடுத்தாமல் காப்பது ஒன்றே நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்குமென கருதுகின்றேன்.

ஜெய் ஹிந்த்

1 comment:

  1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்"

    புதுவை வேலு

    ReplyDelete