Tuesday, 16 December 2014

உணவரங்கம்


                        அந்த உணவரங்கத்தில் அமைதி நிலவியது. நானும் எனது மூன்று நண்பர்களும் சேர்ந்து இரவு உணவுண்ண சென்றிருந்தோம். எங்களுக்குத் தேவையான உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது அருகாமை மேசையில் ஒரு வயதான தம்பதியினர் வந்து அமருவதைக் கண்டோம்.
                        வந்து அமர்ந்ததும் அருகில் வந்த வெயிட்டரிடம் தங்களுக்குத் தேவையான ஐட்டங்களை இரண்டிரண்டாக ஆர்டர் செய்தனர். சிறிது நேரத்தில் எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது அந்த முதிர்ந்த தம்பதியினருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
                          இரண்டு பேருக்கும் உணவு வழங்கப்பட்டபோதும் அந்த பெரியவர் உணவுண்ணுவதை பார்த்தவாறும், தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தவாறும் அந்த முதிய பெண்மணி உணவுண்ணாமல் இருந்தார்.
                         எனக்கோ பொறுமையின்றி எழுந்து சென்று, அம்மா, உங்களுக்கும் உணவு வழங்கப்பட்டுவிட்ட்து. அது சூடு ஆறுவதற்குள் நீங்களும் உண்ணலாமே, ஐயா உணவுண்டு முடிக்கும்வரை ஏன் காத்திருக்கின்றீர்கள்? எவ்வளவு பாசமானாலும், உணவை ஏன் காத்திருக்கவைக்கவேண்டும் என்று கேட்டேன்.

                       அதற்கு அந்த பெண்மணி பொறுமையாக என்னைப் பார்த்து சொன்னார், எனக்கு அவருடைய பல்செட் வேண்டும்?

ரட்சிப்பாயா
















நினைவுகளில் நீ நிதம்
புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கிறாய்

நிச்சலனப் பொழுதுகளின் காது மடல்களை
நீவி விட்டுக்கொண்டுமிருக்கின்றாய்

நாசியரும்புத் துளைகளில்
நறுமணத் தென்றல் வீசுகிறாய்

கடுங்கோடையின் காலை வெம்மைகளில்
கற்பனை சாமரம் வீசுகின்றாய்

நிழல் தேடுமென் நேரப் பங்கீடுகளில்
நீளப் பந்தலிடுகிறாய்

இருந்துமெனை அவ்வப்போது
உலர் உதடுகளால் உச்சாடனம் செய்கிறாய்

கனல் பார்வைகளால்
களி நடனம் புரிகின்றாய்

எனது ஏக்கமும் தாக்கமும் நீயாக
இதயக் கூறுகளில்
இருவேறு உணர்வுகளும் படிய

இயல்பினை மீட்க வழியின்றி
உன்னிடமே சரணாகின்றேன்

ரட்சிப்பாயா

பொக்கிஷம்















நீ கொடுத்த புத்தகத்தின்
எழுதாத பக்கத்தில்
எனது விழிகளமர்ந்து கொள்ள
இறக்கைகள் விண்ணில் பறக்கத் தொடங்கின

நொடிக்குள் ஓராயிரம் வார்த்தைகளைப் பிரசவித்து
ஒட்டி வைத்து அழகு பார்க்க
உணர்வலங்காரத் தேரோட்டம் ஆரம்பமானது

மலர்வனத் தோட்டமாய்
மந்தகாசம் வீசத் தொடங்கிய பக்கம்
அழுக்காறும், விகாரமும் கொண்ட
அவன் பார்வையில் மட்டும்
நச்சுப் பாம்புகள் குடிகொண்டிருப்பதாகத் தோன்ற

புத்தகம் கைமாறாது
பாதுகாப்பதே போராட்டமாக
பொக்கிஷமாய் கொண்டு
பூமிக்கடியில் புதைத்து வைத்தேன்,
என்றேனு(று)ம் நான்

எடுத்து வாசிக்கவேண்டுமென…!

Saturday, 8 November 2014

நிதர்சன நிலம்

















மாறும் உறவுகளின் மடியிருக்கைகளில்
உறங்கிக்கிடந்த மனதை
அன்புக் கயிர் கொண்டு சுருக்கிட்டு
வான்வெளியில் தொங்கவிட
மேக ஊஞ்சல்களின் மத்தியில்
மின்னல்களின் துணையுடன்
அந்தரத்தில் தொங்கிய அப்பாவி மனதை
வெகுண்ட வாழ்க்கைக்காற்று சுழன்றடித்து
பாசக் கயிற்றின் முனையறுத்து

நிதர்சன நிலத்தில் வீழச் செய்தது

வாசனை














கண்மூடி
கற்பனையில் லயித்து
அவளன்பை ஆழமாய் உள்வாங்கி
நினைவுச் செல்களில் துழாவியெழுதிய வரிகளில்

அவளின் வாசனை
அமிழ்ந்திருப்பதாக நினைத்து
ஓடிச் சென்று அருகமர்ந்து
ஒவ்வொரு வரியாக வாசித்துக் காட்டியபோது

உணர்வற்றுச் சொன்னாள்
அவ்வாசனை தனதில்லையென..

அதே வரிகளை
அன்றொரு நாள் வாசித்தபோது
அன்பு முத்தமொன்றை ஈந்து
வைரனா நீயென்றவளை

ஊடல்குளிர் உள்சென்று
இதயத் தமனிகளில்
வாசனையறியும் உணர்வை

அடைத்து விட்டதோ..?

பூஜ்ஜியம்













இயலாமைகளில் விளைந்த
இழப்பீடுகளின் விகிதாச்சாரமறிய
வாய்ப்பாடு தவறிய வாய்க்கணக்கில்
பின்ன இலக்கங்கள் முன்னுக்கு பின்னாகிட
முரண்பட்ட வாழ்க்கையை
கடன்வாங்கி கழித்துக் கூட்டிப் பார்க்க

அனைத்தின் முடிவும் பூஜ்ஜியம் என்றது