Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Saturday, 17 October 2015

முனகல்


















முகவரியற்ற முனகலொன்று
மூச்சுக்குழல்கள் வழி வெளிவந்தது

பதப்படுத்தப்பட்ட மனமாயிருந்தும்
அடர்ந்த அழுத்தத்தின்
பாரம் தாங்காது புறம் வந்தது

அழுக்காறுகளும் கண்ணேறுகளும்
பின்னோக்கு சிந்தனைகளும்
சூழ்ந்த சிதைவுப் படிகங்களின் அனலுடன்
அடர்த்தி கூடிய காற்றுமிருக்க
புறம் சாடுவதொன்றே வழியாயிருந்தது

பனிமக் குழம்புகளின் தழுவல்கள்
சிலவற்றில்
ஏக்கப் புதையல்களின் வெளிப்பாடாகவும் இருந்தது

அனர்த்த அவலங்களின் சூழல்களும்
ஒதுக்கவியலாத புழுக்கங்களும்
கலந்தே உழலவேண்டுமென்பது
உலக நியதியாதலால்

புதைந்த எரிமலைக்குள்
வழியாத அழுத்தங்களில்
சிறிதளவு சுமந்த சீற்றத்தின் புறஞ்சாடல்
புதிதாகத் தோன்றவேயில்லை

வெளிப்பட்ட பேரழுத்தப் பெருமூச்சொன்றில்
அத்தனை அவஸ்தைகளையும்
கரைத்திடல் எளிதாவெனும்
கேள்விக்குறி மட்டும் இறுதியில்
தொக்கி நின்றது

Sunday, 11 October 2015

ஒப்பிலா அழகு

மெல்லிய இதழ்களிலே
முத்தமொன்று தந்திடவா?
மின்னுமுன் கண் வழியே
என்னையே கொய்திடவா?
செப்பிடுமுன் மொழியினிலே
சிந்திடும் தேன் மழையல்லவா?
ஒப்பிலா உன் அழகிற்கு
இன்னுயிரை நான் தரவா?

Saturday, 10 October 2015

மூழ்கியபின் நிசப்தம்

குரலறியா சங்கீதத்தில்
குழைந்து கொண்டே
நினைவறியா நிழல்பொழுதில்
நெடு நேரம் நின்றிருந்தேன்.

வரம் மறவா வசந்தமென
வந்தவளின் வாசனைகள்
விரலிடுக்கில் மறையுமோர்
நீர்த்துளியாய் மாறியது.

ஆர்ப்பரிக்கும் அடைமழையின்
இடையிலென் விழிக்கசிவோ
வழியும் நிலை மாறி
என்னிலிருந்து சிதற

கருமேகப் பெருமழையின்
வெற்றுப் பிதற்றல்தனை நீக்கி
புயல் மழையாய் கொட்டியது
என் விழியில் கசிந்த துளி!

அத்தனைக்கும் அவள் மழையே
அடர்த்தியெனும் பிடிவாதம்
மூழ்கும்வரை பிதற்றி
மூழ்கியபின் நிசப்தம்!

முன்கோபம்

















என்றைக்கு அது இடம்பெயர்ந்து
பிரிதொன்றுக்கு வாய்ப்பளித்ததெனத்
தெரியவில்லை

ஒற்றை நாளில் நிகழ்ந்திருக்க
வாய்ப்பில்லை

எப்போதும் வெளிவரத்
துடித்துக்கொண்டிருந்த அது
எல்லோருக்கும் இம்சையெனவே
உணரப்பட்டிருந்தது

உடல் முழுக்க ஊடுருவி
ரத்த நாளங்களை சூடேற்றி
எளிதில் கசப்பை
வெளித்துப்ப வைத்திருந்ததனால்
இதுதானெனது சுயமென
அனைவரையும்
அதிருப்திக் கொள்ள வைத்திருந்தது

என்று தனதிருப்பிடத்தை விட்டு
சற்று நகர்ந்து
பிரிதொன்றுக்கு வழி கொடுத்ததோ
அன்றே அதனாதிக்கம்
பறிக்கப்பட்டிருந்தது

சிறுகச் சிறுக
ஆக்கிரமிப்பு அதிகமாக
பிறரின் பிடிவாத விருப்பங்களில்
தன்னையும்
தன் சுயத்தையும் பறிகொடுத்து
எங்கும் எதற்கும்
யாருடைய விருப்பத்திற்கும்
செவிசாய்த்து

ஒற்றை முனகலில்
தொண்டைக்குள் நிற்கும்
வேதனை முள்ளை விழுங்கியபடியே
விட்டுக்கொடுப்பினுக்கு மட்டும்
முழுமையான ஆளுமையளித்து

காணாமலே போய்விட்டதந்த
மூக்குநுனி முன்கோபம்

Friday, 9 October 2015

உனைத் தேடி



தெளிவற்ற வானம் தந்த
நிழல் பாதையில்
பூத்துவாலையாய்
நீர் திவலைகள் மேல் தெளிக்க
பாதச்சுவடுகள்
பதியாமல் நடந்தபடி நான்

வேட்கையற்ற பொழுதுகளில்
என்னுள்ளம்
விரவி கிடக்க
ஓசையற்ற சங்கீதம்
செவிகளில் மட்டும்

இதழ் தொட்ட
துளி மழை நீரில்
உன் விரல் தொட்ட
மருதாணி வாசம்
எப்படி வந்தது

நிலம் பதிந்த
நீர் திட்டுகளில்
விளக்கொளியின்
வர்ண ஜாலங்களிலும்
உன் புன்னகையே
பூத்து கிடக்கிறது.

கனவு தேசத்து பாதையிலே
கரம் பிடித்த வேளைகள்
மீண்டும் மீண்டுமென் நினைவில்
சுவை கூட்டப்பட்ட
செந்தேனாய்
சிதறி ஓடுகிறது.

மழை நீரில் நனைந்தாலும்
உள்ளுக்குள் தாகம்
ஊற்றாகப் பெருகி
உமிழ் நீரையும்
வற்றிப்போக செய்ய

துவளும் பாதங்களை
திருத்தி நேர் வைத்து
உனைத் தேடி
உனைத் தேடி,
இனியும்......

Tuesday, 6 October 2015

பிடித்தவை

பிடித்தவை பிடித்தவையாய் இருப்பதில்லை,
பிடித்த விதத்தில் வரும் வரை...!

கோவணம் கட்டிய காதலன்



பிய்த்தெடுங்கள் அவன் முகமூடியை
வாயெல்லாம் பொய் சூடி
அத்தர் பூசி மணந்து
இரவல்களால் அலங்கரித்து
ஆயிரம் புனை பேசி
அவளை மயக்கினான்

அவளும் கூட அப்படித்தான்
ரதியாய் முகஞ்சூடி
கதியே நீயென்று கூறி
சொல்வதெற்கெல்லாம் இணங்கி
சொந்தங்களை மறந்து
காதலாய் மலர்ந்தாள்.

மணம் முடிந்து
மறுவீடு நுழையும்போதே
நீயா அவன்
நீயா அவள்

நிஜ முகங்ள் வெளித்தோன்ற
நித்திரைகள் களைந்து
சிந்தனைகள் பிணங்கி
சொந்தங்களின் பிடியில்

சின்னாபின்னமாகும்
அவர்களின்
உண்மை நிலை
உணரும்படி
அத்தனையும் களைந்து
அம்மணமாய் திரிய விட்டு

வேண்டுமெங்கிலோர்
கோவணமும்
கச்சையும் மட்டும் கொடுத்து
காதலிக்க சொல்லுங்கள்.

உண்மைக் காதலை
உலகறியட்டும்!

Saturday, 3 October 2015

சிதிலமடைந்த வாழ்க்கை


வாழ்க்கைப் பயணத்தின் இடர்பாடுகள்
சில நேரம் செதுக்கப் பட்டதாய்
பல நேரம் சிதிலமடைந்ததாய்

இன்றிருக்கும் சோதனை
நாளையில்லை
உனக்கிருக்கும் வேதனை
எனக்கில்லை

தினம் தினம் இரவின்
தேக்க நிலைகளைத் தாண்டியே
அதிகாலை பார்வை

தூக்கத்தில் கூட
துடிக்கும் இதயத்தை
தூண்டிய படியே இருக்கின்றன
பல நிகழ்வுகள்.

வேடிக்கையோடும்
வேதனையோடும்
வாழ்க்கை பயணம்

வழி நெடுக
சில சுமைகளை இறக்கியும்
சில சுமைகளை ஏற்றியும்
தொடர்ந்த படியே
பயணிக்கின்றது
சிதிலமடைந்த வாழ்க்கை…!